ADDED : ஏப் 06, 2024 03:55 AM

பெங்களூரு,: கர்நாடக மாநிலம் பெங்களூரில், 'ராமேஸ்வரம் கபே' என்ற ஹோட்டலில், மார்ச் 1ல் குண்டுவெடிப்பு நடந்தது.
இதில், ஹோட்டல் ஊழியர்கள் உட்பட, 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
குண்டு வெடிப்பு குற்றவாளிகளாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முஸாவிர் ஹுசைன் ஷாகிப், 30, அப்துல் மதீன் தாஹா, 30, ஆகியோரை அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால், தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களின் கூட்டாளி முஸாமில் ஷெரீபை, 32 கைது செய்துள்ளனர்.
கர்நாடகா, தமிழகம், உ.பி.,யில், 18 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி ஒருவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்ததாக நேற்று தகவல் பரவியது.
இதை, அதிகாரிகள் மறுத்துள்ளனர். 'குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படுவோர், கைதான முஸாமில் ஷெரீப் ஆகியோருடன், பள்ளி, கல்லுாரியில் படித்த நபர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளனர்.

