லோக் ஆயுக்தா போலீசாருக்கு என்.ஐ.ஏ., பாணியில் ஜாக்கெட்
லோக் ஆயுக்தா போலீசாருக்கு என்.ஐ.ஏ., பாணியில் ஜாக்கெட்
ADDED : மே 28, 2024 06:27 AM

பெங்களூரு: கர்நாடக அரசில் லஞ்சம் வாங்குவோர், ஊழலில் ஈடுபடுவோரை கைது செய்யும் லோக் ஆயுக்தா உயர் போலீசாருக்கு, 'என்.ஐ.ஏ.,' பாணியில், புதிய நீல நிற ஜாக்கெட், ஸ்மார்ட் போன், மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா அரசில் ஊழல் செய்வோர், லஞ்சம் வாங்குவோரை பிடிக்க, 1984ல் லோக் ஆயுக்தா துவக்கப்பட்டது.
இது, அரசு அதிகாரிகள் ஊழல், லஞ்சம் வாங்குவோருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.
சட்ட விரோதமாக லஞ்சம் வாங்கி, சொத்துக்கள் சேர்த்த அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் ரெய்டு நடத்துவர்.
லோக் ஆயுக்தா போலீசாருக்கு குறிப்பிட்ட சீருடை இல்லாததால், ரெய்டு நடத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவர். இதை தவிர்க்க, லோக் ஆயுக்தா அமைப்பு புதிய யோசனையை கடைபிடித்து உள்ளது.
லோக் ஆயுக்தா போலீசில் உள்ள இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., - எஸ்.பி.,க்கள் என 175 பேருக்கு, 'என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு' போன்று, நீல நிற ஜாக்கெட், தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், வழக்கு தொடர்பான தகவல்கள், ஒருங்கிணைப்பு ஏற்பட ஸ்மார்ட் போனில் வாட்ஸாப் மூலம் தகவல் பரிமாறி கொள்ளலாம். அத்துடன், 108 கம்ப்யூட்டர்கள், 30 மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வழக்கு தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து கொள்ளலாம்.
'ரெய்டு நடத்தும் போது, அதிகாரிகள் கண்டிப்பாக இந்த ஜாக்கெட்டை அணிய வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.