ADDED : பிப் 22, 2025 03:36 AM
பெங்களூரு : போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் பெங்களூரில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரின் பாகலுார் பகுதியில் உள்ள பெல்லாஹள்ளியில் கோழிக்கறி கடை உள்ளது. இந்த கடையில் ஊழியராக அதே பகுதியை சேர்ந்த யாசின் கான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கடைக்கு, கடந்த 19ம் தேதி அடியாகோ மசாலியோ என்ற நைஜீரியர், தன் நண்பருடன் வந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த யாசின் கான், அவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியினருடன் இணைந்து, யாசின் கான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, சிக்கன் கடை ஊழியர் யாசின் கானை அடியாகோ சரமாரியாக அடித்ததுடன், கத்தி யால் குத்தப்போவதாக மிரட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாசின் கான் மரக்கட்டையால் அடியாகோவை தாக்கினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அடியாகோ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், நைஜீரியர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், யாசின் கானை கைது செய்தனர்.

