ம.பி.,யில் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது சிறுவர்கள் உயிரிழப்பு
ம.பி.,யில் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது சிறுவர்கள் உயிரிழப்பு
ADDED : ஆக 05, 2024 12:44 AM

சாகர்: மத்திய பிரதேசத்தில், மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது, சுவர் இடிந்து விழுந்த விபத்தில், ஒன்பது சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி., மாநிலம் சாகர் மாவட்டத்தின், ஷாபூர் என்ற கிராமத்தில் உள்ள ஹர்தவுல் பாபா கோவில் வளாகத்தில், நேற்று காலை 8:30 மணி அளவில் மத வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, கோவில் வளாகத்தில் போடப்பட்டிருந்த கூடாரத்தின் கீழ் குழந்தைகள் உட்பட பலர் இருந்தனர்.
இந்நிலையில், கூடாரம் அருகே இருந்த பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து கூடாரத்தின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் குழந்தைகள் சிக்கினர்.
இந்த விபத்தில், ஒன்பது சிறுவர்கள்உயிரிழந்தனர்; இருவர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய இரு சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து நடந்த பகுதியை, கலெக்டர் தீபக் ஆர்யா நேரில் பார்வையிட்டார்.
இது குறித்து, கலெக்டர் தீபக் ஆர்யா கூறியதாவது:
கோவில் வளாகத்தில் போடப்பட்டிருந்த கூடாரத்தின் கீழ் சிறுவர்கள் அமர்ந்திருந்தனர். கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில், 10 - 15 வயதுக்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் உயிரிழந்தனர். சிகிச்சையில் உள்ள இரு சிறுவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர். விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், இறந்தவர்களின் குடும் பத்திற்கு மத்திய - மாநில அரசு சார்பில் தலா 2 லட்சம் மற்றும் 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.