ஒன்பது நக்சல்கள் சுட்டுக்கொலை; சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி
ஒன்பது நக்சல்கள் சுட்டுக்கொலை; சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி
ADDED : செப் 04, 2024 02:09 AM
தண்டேவாடா: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், ஒன்பது நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தார் மண்டலத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருடன், மத்திய ரிசர்வ் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதேபோல், பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய சோதனையில், அப்பகுதியில் பதுங்கி இருந்த 13 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதன் வாயிலாக, நடப்பாண்டில் மட்டும் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 154 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.