காங்கிரசுக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை: பிரதமர் மோடி
காங்கிரசுக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை: பிரதமர் மோடி
ADDED : ஏப் 07, 2024 12:10 AM

ஷாஹரான்புர்: ''நாட்டின் சுதந்திரத்துடன் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் முடிவு, 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. தற்போது அது தொலைதுாரத்தில் கூட காணவில்லை. அந்தக் கட்சிக்கு வேட்பாளர்கள் கூட கிடைக்கவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் செய்தார்.
லோக்சபா தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ஷாஹரான்புரில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
ஒரு உண்மையான மதச்சார்பில்லாத அரசு என்பது, ஜாதி, மதம் பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் கிடைப்பதை உறுதி செய்வதே. அந்த வகையில், 10 ஆண்டுகளில், பா.ஜ., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், முடிவுகளை குறிப்பிடலாம்.
மகிழ்ச்சி
முத்தலாக் எனப்படும் பெரும் கொடுமையில் இருந்து முஸ்லிம் பெண்கள் மீட்கப்பட்டனர். உண்மையில், இது முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் பலனளிக்கவில்லை.
அவர்களுடைய குடும்பத்தினரும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் பெண்களின் தந்தை, சகோதரர்கள் என குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளனர்.
நம் நாட்டின் சுதந்திரத்துடன் தொடர்புடையது காங்கிரஸ் கட்சி. மஹாத்மா காந்தி போன்ற தலைவர்கள் இருந்தனர்.
தற்போது அந்த கட்சிக்கு தலைவர்களும் இல்லை; கொள்கையும் இல்லை. தங்கள் முகவரியை அவர்கள் இழந்து விட்டனர்.
கடந்த, 10 ஆண்டு களுக்கு முன், அவர்களுடைய வீழ்ச்சி துவங்கி விட்டது. தற்போது தொலைதுாரத்தில் கூட அவர்கள் தென்படவில்லை. இங்கு, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. சமாஜ்வாதி கட்சி, ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை வேட்பாளர்களை மாற்றுகிறது.
காங்கிரஸ் நிலையோ மிகவும் பரிதாபம். அவர்களுக்கு வேட்பாளர்களே இன்னும் கிடைக்கவில்லை.
தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, நாட்டின் சுதந்திரத்தின்போது, முஸ்லிம் லீக் கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரசின் சோனியா குடும்பம் பாரம்பரியமாக வென்று வந்த உத்தர பிரதேசத்தில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதை குறிப்பிடும் வகையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.

