ADDED : ஜூன் 26, 2024 11:26 PM

புதுடில்லி, : ''விண்வெளித் துறையில் அதிக வாய்ப்புகள் இருந்தாலும், உள்நாட்டில் தேவை மற்றும் லாபம் கிடைக்காது என்பதால், முதலீடுகள் செய்வதற்கு பெரிய நிறுவனங்கள் தயங்குகின்றன,'' என, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி மாநாடு புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:
விண்வெளித் துறையில் அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. தனியாரும் ஈடுபட அனுமதி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக பல பெரும் தொழில் நிறுவனங்களிடம் பேசினேன்.
அவர்களும் இதில் முதலீடுகள் செய்வதற்கு தயாராக உள்ளனர். ஆனால், உள்நாட்டில் அதற்கு தேவைகள் இல்லாதது மற்றும் 'பிரேக் ஈவன்' எனப்படும் எப்போது லாபத்தை பெற முடியும் என்பது நிச்சயமில்லாததாக உள்ளதாக கூறுகின்றனர்.
இதனால்தான், ராக்கெட் தயாரிப்பு, விண்கலம் தயாரிப்பில் பெரிய அளவில் தனியார் முதலீடுகள் இல்லை.
அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினால், இந்தத் துறையில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க முடியும்.
உள்நாட்டில், தேவைகளை நாம் உருவாக்க வேண்டும். இதுதான் முதல்படி.
சர்வதேச அளவில், ராக்கெட் தயாரிப்புக்கான செலவு குறைந்து வருகிறது. ஆனால், அதுபோன்ற நிலை இங்கு இல்லை.
செலவைக் குறைத்தால், சிறிய விண்கலங்களை அதிகளவில் செலுத்த முடியும். இந்தத் துறையில் அதிகமானோரை ஈடுபட ஆர்வத்தைத் தூண்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.