ADDED : ஏப் 10, 2024 05:37 AM

குடகு : ''கர்நாடகாவில் பிரதமர் மோடி அலை இல்லை,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., மந்தர் கவுடா கூறி உள்ளார்.
குடகு மடிகேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மந்தர் கவுடா அளித்த பேட்டி: மைசூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணை, வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, எங்களுக்கு உள்ளது. குடகு மாவட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் பொறுப்பு எடுத்து கொண்டால், லட்சுமணை எளிதில் வெற்றி பெற வைக்க முடியும். மாநில அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் பற்றி, மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
கர்நாடகாவில் பிரதமர் மோடி அலை இல்லை. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, பொய் பேசி வருகிறது. பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, சரியாக வேலை செய்யாததால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை. குடகு மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்ற நான் டாக்டர். பொன்னண்ணா வக்கீல். காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் இன்ஜினியர்.
நாங்கள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தவர்கள். லட்சுமண் வெற்றி பெற்றால், அது மக்கள் வெற்றி பெற்றது போன்றது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எத்தனை முறை கர்நாடகா வந்து, ரோடு ஷோ நடத்தினாலும், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். அவர்கள் இருவரும் வந்தால், காங்கிரசுக்கு வெற்றி தான். கடந்த லோக்சபா தேர்தலில், அவர்கள் இருவரும் நடத்திய ரோடு ஷோ தான், காங்கிரசுக்கு வெற்றி பெற்று கொடுத்தது.
இவ்வாறு அவர்கூறினார்.

