உலகில் யாரும் நேர்மையானவர் இல்லை தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் மனைவி பேச்சு
உலகில் யாரும் நேர்மையானவர் இல்லை தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் மனைவி பேச்சு
ADDED : செப் 07, 2024 06:54 PM

பிவானி:“ஹரியானாவின் மகன் கெஜ்ரிவாலுடன் நில்லுங்கள்,” என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசினார்.
ஹரியானா சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. ஓட்டுக்கள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் சுற்று வாரியாக அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.,வும், ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றன.
பிவானி தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசியதாவது:
டில்லி முதல்வரான என் கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானாவின் மகன். நான் உங்கள் மருமகள். என் கணவரை பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர். ஹரியானாவின் மகனான கெஜ்ரிவால் சிங்கம் போன்றவர். அவர் என்றுமே பா.ஜ.,வுக்கு பணிய மாட்டார். இந்த அவமானத்தை ஹரியானா மக்கள் பொறுத்துக் கொள்வீர்களா? சட்டசபைத் தேர்தலில் உங்கள் மகனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஆட்சியை நடத்த மட்டுமே விரும்பும் ப.ஜ., ஹரியானா மக்கள் நலன் பற்றி கவலைப்படவில்லை. சமூக நலனில் ஆர்வம் என்பதே பா.ஜ.,வுக்கு கிடையாது. எதிர்க் கட்சிகளை உடைப்பது, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுத்து சிறையில் அடைப்பது ஆகிய வேலைகளைத் தான் பா.ஜ., செய்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவை ஆளும் பா.ஜ.,வுக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட மக்கள் வழங்கக் கூடாது.
கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட்டுள்ளதா? உங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்கிறதா? மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறதா?
ஆனால், இவை அனைத்தும் ஆம் ஆத்மி ஆளும் டில்லி மற்றும் பஞ்சாப் மக்களுக்கு கிடைக்கிறது. மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஹரியானாவின் சிவானி கிராமத்தில் பிறந்து ஹிசாரில் வளர்ந்த கெஜ்ரிவால், டில்லி முதல்வர் ஆவார் என கனவில் நினைத்துப் பார்க்கவில்லை. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. என் கணவர் 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஜென்மாஷ்டமி நாளில் பிறந்தார். பகவான் கிருஷ்ணர், அரவிந்த் கெஜ்ரிவால் வாயிலாக மக்களுக்கான பணிகளை செய்கிறார் என்றே நான் உணர்கிறேன்.
நாட்டின் பெரிய கட்சிகள் மற்றும் மூத்த தலைவர்கள் கூட செய்ய முடியாத விஷயங்களை அரவிந்த் கெஜ்ரிவால் சாதாரணமாக செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவாலின் மக்கள் நலப்பணிகளைப் பார்த்து பொறாமையும் பயமும் ஏற்பட்டுள்ளது. மோடியால் மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்க பிரதமரால் முடியவில்லை.
அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் மக்கள் நலப்பணிகளைத் தடுக்க பொய் வழக்குகளை தொடுத்து சிறையில் அடைத்துள்ளனர்.
என் கணவரை பா.ஜ.,வினர் திருடன் என்கின்றனர். உலகில் யாருமே நேர்மையானவர் இல்லை.
ஹரியானா மக்கள் அக்டோபர் 5ம் தேதி துடைப்பம் சின்னத்துக்கு ஓட்டுக்களைக் குவித்து, ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இதை என் கணவருக்காக கேட்கவில்லை. இது, ஹரியானாவின் கவுரவப் பிரச்னை.
ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன் டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களைப் போலவே, ஹரியானாவிலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மாநிலம் முழுதும் மொஹல்லா கிளினிக் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதி வழங்கப்படும். இளைஞருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத் துறை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், சி.பி.ஐ., வழக்கில் ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.