ADDED : மார் 28, 2024 04:31 AM

பெங்களூரு : “கோடை காலத்தில் போதிய மின்சாரம் வழங்குவதற்கு எங்கள் அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக பணிகள் நடந்து வருகின்றன,” என, மின் துறை அமைச்சர் ஜார்ஜ், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகத்தில் தற்போது மின் வினியோகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
மாநில மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் மின் துறை கவனித்து வருகிறது.
எடுக்கப்பட்ட நடவடிக்கை:
l மார்ச், ஏப்ரல் மாத தேவைக்கு ஏற்ப, அனல் மின் நிலையங்களில் அதிகபட்ச உற்பத்திக்கு முக்கியத்துவும் அளிக்கப்பட்டு உள்ளது
l இம்முறை போதிய மழை இல்லாததால், நீர்த்தேக்கங்கள் பாதியளவு மட்டுமே தண்ணீர் உள்ளதால், மிகவும் கவனமாக பயன்படுத்தப்படுகிறது
l முன்னெச்சரிக்கையாக, ஜூன் 2024ல் உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் இருதரப்பு பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு அம்மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்
l மின்சார சட்டத்தின் 11வது பிரிவை அமல்படுத்துவதன் மூலம், தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது
l சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் (பெரும்பாலும் தனியார் துறை) கட்டாயம் இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்றன
l மாநிலத்துக்கு கூடுதல் மின்சாரம் தேவை என்பதால், இந்தாண்டு மத்திய மின் அமைப்பில் இருந்து 302 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும்
l எதிர்பாராத அல்லது திடீர் மின் தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு விதித்துள்ள மின் பரிமாற்றங்களில் இருந்து வெளிப்படை தன்மையுடன் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது
l மாநிலம் முழுதும் போதிய மின் வினியோகத்தை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை பொறியாளர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்
l நிலக்கரி அமைச்சகத்திடம் இருந்து கூடுதல் நிலக்கரி, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படும்
l விரைவில் 370 மெகாவாட் திறன் கொண்ட எலஹங்கா எரிவாயு ஆலை உற்பத்தியை துவங்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.