தடையில்லை! 75 வயது ஆன பிறகும் மோடி பிரதமராக தொடர... கெஜ்ரிவால் கணிப்பு தவறு என்கிறார் அமித்ஷா
தடையில்லை! 75 வயது ஆன பிறகும் மோடி பிரதமராக தொடர... கெஜ்ரிவால் கணிப்பு தவறு என்கிறார் அமித்ஷா
ADDED : மே 12, 2024 12:37 AM

''அடுத்தாண்டில் 75 வயது முடிவதால், பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகுவார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை, அடுத்த பிரதமராக விரும்பும் அமித் ஷா நிறைவேற்றுவாரா?'' என, ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டதற்கு பதிலளித்த அமித் ஷா, ''75 வயதில் ஓய்வு என எங்கள் கட்சி சட்டத்தில் கூறப்படவில்லை. மோடியே பிரதமராக தொடர்வார்,'' என்றார்.
மதுபான கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று தீவிர பிரசாரத்தை துவக்கினார். அப்போது அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் கூறியதாவது:
எங்கள் கட்சியை ஒழிக்க மோடியும், அமித் ஷாவும் அரும்பாடு படுகின்றனர். ஒரு நாடு, ஒரே தலைவர் என்ற கொள்கையை அமல்படுத்த விரும்புகின்றனர். ஆனால், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதில் ஆம் ஆத்மியும் இடம்பெறும்.
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரள முதல்வர் விஜயன் உட்பட எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும் மோடி சிறைக்கு அனுப்பி விடுவார்.
தலைவர்களை சிறையில் அடைத்தால் கட்சிகளை அழித்து விடலாம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். அது நடக்காது.
இண்டியா கூட்டணி ஜெயித்தால் பிரதமர் யார் என்று இருவரும் கேட்கின்றனர். நான் திருப்பிக் கேட்கிறேன்; பா.ஜ., ஜெயித்தால் மோடி தான் பிரதமர் ஆவாரா? அடுத்த செப்டம்பரில் அவருக்கு 75 வயது ஆகும்.
அந்த வயதை எட்டினால் ஓய்வு கொடுத்து அனுப்புவதே பா.ஜ.,வின் வழக்கம். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என பலரை அப்படி தான் அனுப்பினர்.
அதே விதியின்படி, அடுத்தாண்டு மோடிக்கு ஓய்வு கொடுப்பர். அமித் ஷா பிரதமராகி விடுவார். ஆக, பா.ஜ.,வுக்கு போடும் ஓட்டு, மோடிக்கானது அல்ல; அது அமித் ஷாவுக்கானது. மோடியின் கியாரன்டிகளை பிரதமர் அமித் ஷா நிறைவேற்றுவாரா?
பிரதமர் பதவிக்கு அமித் ஷாவுக்கு போட்டியாக இருப்பவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே. இந்த தடவை பா.ஜ., ஜெயித்தால், இரண்டு மாதத்துக்குள் யோகியை காலி செய்துவிடுவர்.
எந்த மாநிலத்திலும் முதல்வர்கள் வலிமையுடன் இருப்பதை மோடி, அமித் ஷாவால் சகித்துக் கொள்ள முடியாது. அப்படி வீழ்த்தப்பட்ட பட்டியலில் கடைசியாக சேர்ந்தவர் சவுகான்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
இந்த பேட்டி சமூக ஊடகங்கள் வழியாக தீயாக பரவியதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சிக்குள்ளேயே பட்டாசு கொளுத்தி போடுகிறாரே என பா.ஜ., நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர். தெலுங்கானாவில் பிரசாரம் செய்து வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக தலையிட்டு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
பா.ஜ.,வில் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்; பதவி வகிக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. அதனால், அடுத்த ஆண்டில் மோடி ஓய்வு பெற்று விடுவார் என்று கெஜ்ரிவால் கனவு காண வேண்டாம்.
நாட்டையும், கட்சியையும் மோடி வழிநடத்துவார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.
யோகி பற்றி அவர் எதுவும் கூறவில்லை. - நமது சிறப்பு நிருபர் -