ADDED : ஆக 30, 2024 08:57 PM

நொய்டா:புதுடில்லி அருகே நொய்டா சர்வதேச விமான நிலையம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் திறக்க திட்டமிடப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தலைநகர் டில்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. ஆனால், நாளுக்கு நாள் இங்கு பயணியர் கூட்டம் அதிகரிப்பதாலும், டில்லி அருகே நொய்டாவில் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ளதாலும் நொய்டாவில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நொய்டா சர்வதேச விமான நிலையம் கட்டும் பணி 2021ம் ஆண்டு நவம்பரில் துவக்கப்பட்டது. யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தப் பணிகளை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரண் ஜெயின் கூறியதாவது:
கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வரும் டிசம்பம் மாதம் ஏரோ ட்ரோம் உரிமத்துக்கு விண்ணப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொது விமானப் போக்குவரத்து இயக்குனரகம், நொய்டா விமான் நிலையம் மற்றும் ஓடுதளத்தை ஆய்வு செய்து உரிமம் வழங்கும்.
ஓடுபாதையின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன. முதற்கட்டமாக, விமான நிலையத்தில் ஒரு முனையம், ஒரு ஓடுபாதை, 10 ஏரோ பிரிட்ஜ் மற்றும் பார்க்கிங் அமைக்கப்படுகிறது.
அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து, நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரலில் விமானப் போக்குவரத்து துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.