தங்கவயல் சுரங்க குடியிருப்பு பகுதிகளில் ஏ.டி.எம்., இல்லாததால் தவிப்பு
தங்கவயல் சுரங்க குடியிருப்பு பகுதிகளில் ஏ.டி.எம்., இல்லாததால் தவிப்பு
ADDED : ஜூலை 23, 2024 10:41 PM
தங்கவயல் : தங்கச் சுரங்க தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
தங்கச்சுரங்க குடியிருப்புப் பகுதிகளின் ஒட்டுமொத்த வர்த்தகம், ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை ஆகிய பகுதிகளை சுற்றியே உள்ளது. இப்பகுதிகளே பண பரிமாற்றத்துக்கு மூல ஆதாரமாக இருந்து வருகின்றன.
தற்போதும் கூட மார்க்கெட்டுகளில் காய்கறிகள் முதல் தங்க நகைகள் வாங்குவோரில் பெரும்பாலானோர், தங்கச்சுரங்க தொழிலாளர் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தான் என்றால் மிகையில்லை.
எனவே தங்கச்சுரங்க தொழில் ஆரம்பித்த காலத்தில், அனைத்து ரயில் நிலையங்களுமே தங்கச்சுரங்க குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியே அமைக்கப்பட்டன. ஒரு ரயில் நிலையம் கூட நகராட்சி பகுதிக்கு உட்பட்டதல்ல. தங்கவயலின் முழு பொருளாதார வளர்ச்சியும், தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதிகளை சார்ந்தே உள்ளது.
ஆனால் சுதந்திர இந்தியாவில் தங்கச் சுரங்க குடியிருப்புப் பகுதிகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அடிப்படை தேவையான வங்கிகள் கூட அமைக்கப்படவில்லை. இது போன்று வங்கிகளின் ஏ.டி.எம்.,களும் இன்று வரை நிறுவப்படவில்லை.
குறிப்பாக கோரமண்டல், ஸ்கூல் ஆப் மைன்ஸ், பாலக்காடு, உக்கட் குவார்ட்டர்ஸ், ஹென்றீஸ், ஓரியண்டல், சாம்பியன், உரிகத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள், மாரிகுப்பம், சவுத் பிளாக், சி.ஏ., பிளாக், செல்லப்பா லைன், கிருஷ்ணகிரி லைன், பண்டார் லைன் என பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வேண்டும் என்றால், ஆட்டோவில் சென்று வர ஒவ்வொரு முறையும் குறைந்தது 40 ரூபாய் செலவிட வேண்டும்.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இப்பகுதிகளில் ஏ.டி.எம்.,கள் இல்லாததால் பெரும்பாடாக உள்ளது.
ராபர்ட்சன்பேட்டையில் கீதா சாலை, பிரிட்சர்ட் சாலை, பி.எம்.,சாலை, அம்பேத்கர் சாலை மினி இப்ராஹிம் சாலை, 4வது பிளாக், சொர்ணாநகர், விவேக் நகர் ஆகிய இடங்களில் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றின் ஏ.டி.எம்.,கள் உள்ளன.
இவற்றிலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் பணமே இருப்பதில்லை. இத்தகைய நேரங்களில் தங்கவயலுக்கு அப்பால் ஏ.டி.எம்.,களை தேடி அலைய வேண்டி உள்ளது.
தங்கவயல் சுரங்க குடியிருப்பு பகுதிகளில் ஏ.டி.எம்.,கள் இல்லாததால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
தங்கவயலின் கோரமண்டல், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம் ரயில் நிலையங்களின் அருகில் ஏ.டி.எம்.,கள் தேவை என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது.

