sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வடகிழக்கு மாநிலங்கள் மழையால் தத்தளிப்பு

/

வடகிழக்கு மாநிலங்கள் மழையால் தத்தளிப்பு

வடகிழக்கு மாநிலங்கள் மழையால் தத்தளிப்பு

வடகிழக்கு மாநிலங்கள் மழையால் தத்தளிப்பு

5


UPDATED : ஆக 04, 2024 11:40 AM

ADDED : ஆக 04, 2024 12:01 AM

Google News

UPDATED : ஆக 04, 2024 11:40 AM ADDED : ஆக 04, 2024 12:01 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிம்லா: ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கன மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஹிமாச்சலில் கிராமமே அடித்துச் செல்லப்பட்டதால், மாயமானவர்களை தேடும் பணியில்பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஹிமாச்சலில் ஒரு வாரமாக மழை பெய்து வந்த சூழலில், சிம்லா, குலு, மாண்டி மாவட்டங்களில், கடந்த 31ம் தேதி கனமழை கொட்டியது. மேக வெடிப்பு காரணமாக மூன்று மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், நீர்நிலைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக பல்ராம்பூர் என்ற இடத்தில், 24 மணி நேரத்தில் 21 செ.மீ., மழை பெய்தது. சிம்லா மாவட்டத்தில் உள்ள சமேஜ் கிராமத்தில், ஒரு வீடு தவிர, மொத்த கிராமமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கண் முன்னே கிராமம் அழிந்ததை, அந்த ஒரு வீட்டில் வசித்து வந்த அனிதா தேவி என்பவர் கூறியதாவது:

மழை பெய்து கொண்டிருந்த போது, பயங்கரமான இடி சத்தம் கேட்டது. நானும், கணவரும் வெளியே வந்தபோது, கிராமம் முழுதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்தோம். அருகில் இருந்த பகவதி காளி மாதா கோவிலுக்கு தப்பிச் சென்று, அன்றிரவு முழுதும் அங்கேயே தங்கினோம். எங்கள் வீடு மட்டும் இந்த அழிவிலிருந்து தப்பியது. ஆதரவுக்கு கூட யாருமே இல்லை என்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் அச்சத்துடன் கூறினார்.

Image 1302928சமேஷ் கிராமத்தைச் சேர்ந்த பக் ஷி ராம் என்பவர் வேலை நிமித்தமாக அருகில் இருந்த ராம்பூருக்கு சென்றதால் உயிர் தப்பினார். ஆனால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் 15 பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கிராமத்தில் வசித்து வந்த 70க்கும் மேற்பட்டோர், வெள்ளத்தில் மாயமானதை அடுத்து, அவர்களை தேடும் பணியில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். கிராமம் இருந்த இடத்தில், இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மாவட்டங்களிலும், கனமழைக்கு இதுவரை, எட்டு பேர் பலியானதாக அரசு அறிவித்தது. மாயமான 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது. குலு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகண்ட் மஹாதேவ் பகுதியில் சிக்கிய 300 பேர், பேரிடர் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். மலானாவில் தவித்த 25 சுற்றுலா பயணியர் மீட்கப்பட்டு, உள்ளூர் மக்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிம்லா மாவட்டத்தில் பாறை இடுக்கில் சிக்கிய சிலரை கண்டறிந்த மீட்புக் குழுவினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக கொட்டிய கனமழையால் நிலச்சரிவு, மண் அரிப்பு போன்றவை காரணமாக, மாநிலம் முழுதும், 190க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன. பல வழித்தடங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து இடங்களிலும் ராணுவம், தேசிய மற்றும் பேரிடர் மீட்புக் குழு, இந்தோ - திபெத் பாதுகாப்பு படை, போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள 10 மாவட்டங்களுக்கு, வரும் 7ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இங்குள்ள பகோரா மாவட்டத்தில், 300 மீட்டர் நீளமுள்ள பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது; ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மரங்களும் வேருடன் சாய்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், அஜ்மீர், பிகானீர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அதிகபட்சமாக நேற்று காலை 8:00 மணிக்கு முந்தைய 24 மணி நேரத்தில், பிகானீரில் 19 செ.மீ., மழை கொட்டியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. கோல்கட்டாவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தின் ஓடுபாதைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிக்குஉள்ளாகினர். கிழக்கு பர்தமான், நாடியா பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை தேசிய மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். கடந்த 24 மணி நேரத்தில், கோல்கட்டாவில் 7 செ.மீ., மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

உத்தரகண்டில் மீட்பு பணி தீவிரம்


உத்தரகண்டில் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதைகள், கனமழையால் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த இரு பகுதிகளிலும் சிக்கிய பக்தர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. கேதார்நாத், பிம்பாலி, கவுரிகுண்ட் பகுதிகளில் சிக்கித் தவித்த 1,300க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டதாக உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது. விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் வாயிலாக மீட்கப்பட்டவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us