/
செய்திகள்
/
இந்தியா
/
* டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்கள்... மிதக்குது! * மூன்று பேர் உயிரிழப்பு; 3 சிறுவர்கள் மீட்பு * சாலை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது
/
* டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்கள்... மிதக்குது! * மூன்று பேர் உயிரிழப்பு; 3 சிறுவர்கள் மீட்பு * சாலை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது
* டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்கள்... மிதக்குது! * மூன்று பேர் உயிரிழப்பு; 3 சிறுவர்கள் மீட்பு * சாலை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது
* டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்கள்... மிதக்குது! * மூன்று பேர் உயிரிழப்பு; 3 சிறுவர்கள் மீட்பு * சாலை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது
UPDATED : ஆக 30, 2025 11:26 PM
ADDED : ஆக 30, 2025 11:23 PM

புதுடில்லி:டில்லி மற்றும் புறநகரில் இருநாட்களாக மழை கொட்டித் தீர்த்தது. மாநகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேசிய தலைநகர் பிராந்தியம் ஹரியானா மாநிலம் பரிதாபாதில், மழைநீர் வடிகால்வாயில் விழுந்த காரில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது, பழைய கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. மீட்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
![]() |
டில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே மழை கொட்டுகிறது. நேற்று காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரை சப்தர்ஜங்கில் 5.62 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. லோதி சாலை - 3.48 செ.மீ., அய நகர் - 1.18 செ.மீ., மழை பதிவாகி இருந்தது.
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், மணிக்கு -40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அறிவித்துள்ளது.
நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 92 சதவீதமாக இருந்தது. காற்றின் தரக்குறியீடு காலை 9:00 மணிக்கு 110 ஆக இருந்தது.
இது திருப்திகரமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் கனமழையால் டில்லி மாநகரின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. டில்லி- - நொய்டா- மேம்பாலம், மதுரா சாலை, விகாஸ் மார்க், ஐ.டி.ஓ., ஐ.எஸ்.பி.டி., கீதா காலனி, சாராய் காலே கான், பிரகதி மைதா னம், மெஹ்ரூலி- - பதர்பூர் சாலை, அக் ஷர்தாம், ரோஹ்தக் சாலை, பீராகர்ஹி சாலை, டில்லி - -ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை, மதுபன் சவுக், எம்.பி., சாலை, மஹாத்மா காந்தி சாலை, தவுலா குவான் மற்றும் ராஜாராம் கோலி சாலை ஆகிய சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பதர்பூரில் இருந்து ஆசிரமம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால், அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஏராளமானோர் போக்குவரத்து நெரிசலை மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சில இடங்களில் ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கின.
பதர்பூர் மேம்பாலத்திலிருந்து சரிதா விஹார் மெட்ரோ நிலையம் வரை வாகனங்கள் மணிக்கணக்கில் நின்றன. இதனால், நான்கு கி.மீ., தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் ஆனது.
அதேபோல, எய்ம்ஸ் சவுக்கில் தேங்கியிருந்த வெள்ளத்தில் சிக்கிய ஏராளமான பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பழுதடைந்தன. மழையில் நனைந்தவாறே முழங்கால் அளவு வெள்ளத்தில் வண்டியை உருட்டிச் சென்றனர்.
பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக், மெஹ்ரூலி - குருகிராம் சாலை, நேரு பிளேஸ், கைலாஷ் கிழக்கு மற்றும் கித்வாய் நகர் ஆகிய இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் ஓடியது.
3 சிறுவர்கள் மீட்பு கிழக்கு டில்லி மண்டாவலி பள்ளியில் படிக்கும் பங்கஜ்,8, துருவ்,10, மற்றும் ஆதி,8, ஆகிய மூவரும் நேற்று மதியம், 1:00 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்பினர். பத்தா சவுக்கில், பழைய வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து, நடந்து சென்று கொண்டிருந்த மூவர் மீதும் விழுந்தது. தகவல் அறிந்து போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த மூன்று சிறுவர்களும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மிதக்கும் பஞ்சாப் அண்டை மாநிலமான பஞ்சாபின் ஹோஷியார்பூரில், பியாஸ் நதியின் துணை நதியான சக்கி காட் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
பியாஸ் நதியில் அமைந்துள்ள பாங் அணை நீர்மட்டம் 1,391.98 அடியாக உயந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 53,000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை முதல் அணையில் இருந்து ஒரு லட்சத்து, 614 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த, 24ம் தேதி பியாஸ் நதியின் கரையின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், 2,200 ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்தது.
தண்டா மாவட்டத்தில் காந்தோவல், ராரா மண்ட், தல்ஹி, சேலம்பூர், அப்துல்லாபூர், மேவா மியானி மற்றும் பட்டா குல்லா, முகேரியன் மாவட்டத்தில் மோட்லா, ஹாலர் ஜனார்தன், சானியல், கோலியன் மற்றும் மெஹ்தாப்பூர் ஆகிய இடங்களிலும் வயல்கள் மூழ்கின.
ஹோஷியார்பூர் துணை கலெக்டர் ஆஷிகா ஜெயின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாகவும், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாட்டியாலா ககார் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் உன்ட்சார், நன்ஹேரி, சஞ்சர்பூர், லச்ரு, கமல்பூர், ராம்பூர், சவுந்தா, மாரு மற்றும் சாம்ரு கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த, 1988ம் ஆண்டுக்குப் பின் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி உள்ளிட்ட ஆறுகளி ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஏராளமான கிராங்கள் மூழ்கியுள்ளன. பதான்கோட், குருதாஸ்பூர், பாசில்கா, கபூர்தலா, தரன் தரன், பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களும் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுதும் உள்ள நிலைமை குறித்து அறிய கலெக்டர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார். நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
கடந்த, 1993ல் பட்டியாலாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதற்குப் பின் இப்போது அதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, 2023ம் ஆண்டிலும், பலத்த மழை காரணமாக பட்டியாலா மாவட்டத்தின் பல கிராமங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள், வீடுகள் மூழ்கின
ராஜஸ்தான்
அண்டை மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு ராஜஸ்தானில் கனமழை கொட்டுகிறது. பன்ஸ்வாரா மாவட்டம் சஜ்ஜன்கரில் அதிகபட்சமாக 1.36 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு கிழக்கு மற்றும் தெற்கு ராஜஸ்தானில் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல, தென்கிழக்கு ராஜஸ்தானில் இன்று முதல் மழை அதிகரிக்கும் என்றும், கோட்டா மற்றும் உதய்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறினர். மேலும், ஜோத்பூர் மற்றும் பிகானீர் மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், செப்டம்பர் முதல் வாரத்தில் கனமழையாக உருவெடுக்கும் என கூறியுள்ளனர்.