UPDATED : ஜூன் 02, 2024 05:27 PM
ADDED : ஜூன் 02, 2024 04:51 PM

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை. தேசம் தான் முக்கியம் என திஹார் சிறையில் சரணடைய உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து திஹார் சிறை சென்று சரணடைந்தார்.
டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் இன்றுடன் (ஜூன் 02) நிறைவடைந்தது. இதனால் கெஜ்ரிவால் திஹார் சிறையில் சரணடைய புறப்பட்டார். காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், தனது மனைவியுடன் கன்னாட் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர் ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
தியாகம்
அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது: என் மீதான குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தேர்தல் பிரசாரம் செய்ய வசதியாக ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை. தேசம் தான் முக்கியம். 21 நாட்களில் ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கவில்லை. சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக நான் மீண்டும் சிறை செல்கிறேன். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவேன். எனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்வேன். என்னை(கெஜ்ரிவாலை) திறமையான திருடன் என்கிறார் பிரதமர் மோடி.
கருத்து கணிப்புகள்
அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவறானது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஒரே ஒரு ஆதாரத்தையாவது அமலாக்கத்துறையால் சமர்பிக்க முடியுமா?. என் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் அமலாக்கத்துறை கைப்பற்றவில்லை. அடக்குமுறை அரசுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள். ஓட்டு எண்ணிக்கையின் போது கடைசி வரை இருந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து திஹார் சிறைக்கு சென்று சரணடைந்தார்.