ஓய்வு பெறுவதாக கூறவில்லை: ரமேஷ் குமார் 'அந்தர் பல்டி'
ஓய்வு பெறுவதாக கூறவில்லை: ரமேஷ் குமார் 'அந்தர் பல்டி'
ADDED : ஏப் 10, 2024 05:31 AM

சீனிவாசப்பூர் : ''அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறவில்லை. ஊடகங்கள் தான் திரித்து, தவறாக கூறியுள்ளன,'' என, முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்த காங்கிரசின் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கவுதமை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று சீனிவாசப்பூரில் அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் மேலிடம், கோலாரில் கவுதமை வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரை வெற்றி பெறச் செய்வது நமது கடமை.
சீனிவாசப்பூர் தொகுதியில், கடந்த 45 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். அனைத்து தொண்டர்களின் வீட்டு வாசல்களுக்கும் செல்ல சாத்தியம் இல்லை. அதனால் தான், கூட்டம் நடத்தி கவுதமுக்கு ஓட்டளிக்க வேண்டுகிறேன்.
சீனிவாசப்பூர் தொகுதி, ஆந்திர எல்லையில் உள்ளது. அங்குள்ள, பொதுமக்கள், தொண்டர்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசுபவர்கள். கட்சி தொண்டர்கள் மத்தியில், சட்டசபை தேர்தலில் என்னை தோற்கடித்தவர்கள் பற்றி பேசினேன்.
நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எங்கும் கூறவே இல்லை. ஆனால், ஊடகத்தினர் தப்பாக புரிந்துக் கொண்டு திரித்து செய்தியாக்கி, பெரிதுபடுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

