'தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை'
'தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை'
ADDED : மே 06, 2024 05:02 AM

தார்வாட் : ''மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க, பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கவில்லை,'' என்று, பா.ஜ., முன்னாள் எம்.பி., விஜய் சங்கேஸ்வர் கூறினார்.
தார்வாட் பா.ஜ., முன்னாள் எம்.பி., விஜய் சங்கேஸ்வர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004 முதல் 2014 வரை இருந்தது. ஆட்சியின் முடிவு காலத்தில், கடன் சுமையில் சிக்கியது. கூடுதலாக அவர்கள் ஒரு மாதம், ஆட்சி செய்து இருந்தால், நாடு திவாலாகி இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி பல சீர்திருத்தங்கள் மூலம், நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து வந்து உள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஒரு வேலை கூட நடக்கவில்லை. இப்போது வலிமையான நாடாக மாறுகிறது. பிரதமர் மோடி உலக தலைவராக மாறிவிட்டார். அரசியல் சாசனத்தை மாற்ற மாட்டோம் என்று, மோடி உறுதி அளித்து உள்ளார். ஆனால் ராகுல் போன்றவர்கள், அவதுாறு பரப்பி மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளை, காங்கிரஸ் கவிழ்த்தது. ஆனால் வாஜ்பாயோ, மோடியோ பிரதமராக இருந்த போது, மக்கள் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை.
தார்வாட் பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷி, எளிமையான மனிதர். மத்தியில் அமைச்சராக இருந்தாலும், அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர். நான்கு முறை தொடர்ந்து, வெற்றி பெற்று உள்ளார். ஐந்தாவது முறையாக அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.