சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: பிரதமர் மோடி சாடல்
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: பிரதமர் மோடி சாடல்
ADDED : ஏப் 26, 2024 01:25 PM

கோல்கட்டா: ‛‛ மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும். சமரச அரசியலுக்காக இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாசம்
மேற்கு வங்க மாநிலம் வடக்கு மால்டாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கு வங்க மாநிலம் உந்து சக்தியாக விளங்கியது. சமூக சீர்திருத்தம், அறிவியல் முன்னேற்றம், ஆன்மிக முன்னேற்றம், நாட்டிற்காக தியாகம் ஆகியவற்றில் முன்னணியில் இருந்தது. ஆனால் இடதுசாரி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில், மாநிலத்தின் மரியாதை மற்றும் மதிப்பு நாசப்படுத்தப்பட்டு விட்டது. மாநிலத்தின் வளர்ச்சியும் நின்றுவிட்டது. திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கான அளவுக்கு ஊழல் மட்டுமே நடக்கிறது. ஊழல் செய்யாமல் மாநிலத்தில் எதுவும் நடக்காது. விவசாயிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
லஞ்சம் கேட்பு
மாநிலத்தின் இளைஞர்களின் எதிர்காலத்தில் திரிணமுல் காங்கிரஸ் விளையாடி வருகிறது. 26 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழந்துள்ளன. கடன்சுமையுடன், வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக திரிணமுல் காங்கிரசுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதற்காக, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தோம். அதிலும், திரிணமுல் காங்கிரஸ் லஞ்சம் கேட்கிறது.
நடிப்பு
இங்கு சண்டையிடுவதாக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் நடிக்கின்றன. ஆனால், உண்மையில் இரு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். சமரச அரசியலுக்காக இரு கட்சிகளும் எதையும் செய்யும். சமரச அரசியலுக்காக இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. நாட்டின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவுகளை நீக்க அவர்கள் விரும்புகின்றனர்.
மவுனம்
ஏழை மக்களின் சொத்துகள் குறித்து விசாரிக்க போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே இயந்திரத்தை வாங்கி, அதன் மூலம் அனைவரின் சொத்துகளை ஆய்வு செய்யப் போவதாக கூறியுள்ளது. நகைகள் மற்றும் சொத்துகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் ஆய்வு செய்து அதனை தங்களது ஓட்டு வங்கிக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இதனை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கவில்லை. மவுனமாக இருந்து ஆதரிக்கிறது. உங்கள் நிலங்களை பறித்து அதில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை திரிணமுல் குடியமர்த்தி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

