ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் பலி எதிரொலி மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ்
ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் பலி எதிரொலி மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 01, 2024 01:28 AM
புதுடில்லி, மழைநீரில் மூழ்கி மூன்று ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் உயிரிழந்ததற்கு, டில்லி மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கூறியுள்ள டில்லி உயர் நீதிமன்றம், மாநகராட்சி கமிஷனரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 27ம் தேதி மழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
இதனால், டில்லியின் மேற்கு பகுதியில் உள்ள ராஜேந்திர நகரில் செயல்பட்டு வரும், தனியாருக்கு சொந்தமான ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் 'பேஸ்மென்ட்' எனப்படும் கீழ் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது. இதில், இரு இளம்பெண் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
போராட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி மைய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாலேயே, பயிற்சி மையத்தில் மழை நீர் புகுந்து மாணவர்கள் பலியானதாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என கூறிய உயர் நீதிமன்றம், அதன் கமிஷனரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாநகராட்சி அதிகாரிகளான நீங்கள் இலவச கலாசாரத்தில் ருசியடைந்துள்ளீர்கள்; வரி வசூல் செய்வதில்லை. வசூலித்தால் தானே செலவு செய்ய முடியும். இந்த நிலை நீடித்தால், இது போன்ற துயர சம்பவங்கள் கண்டிப்பாக நடக்கும்.
கடந்த 1980 முதல் டில்லியில் புதிதாக எந்த வடிகால் திட்டமும் இல்லை. வடிகால்கள் எங்கு செல்கின்றன என்பது கூட அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது.
அலட்சியம்
பல மாடி கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அதிகாரிகளால் வடிகாலை சரி செய்ய முடியவில்லை.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக எந்த திட்டமிடலும் இல்லை. பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த வழியாக காரில் சென்ற டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி மாநகராட்சி மீதோ, அதன் அதிகாரிகள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் வழக்கை திசை திருப்ப முயல்கின்றனரா?
இது ஒரு குற்றவியல் புறக்கணிப்பு வழக்கு. அதிகாரிகளின் அலட்சியம் தான் இதற்கு காரணம். ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அனைத்து வடிகால்களையும் வரும் 2ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இல்லையென்றால், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் அல்லது லோக்பால் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க டில்லி மாநகராட்சி கமிஷனர், சம்பவம் நடந்த பகுதியின் போலீஸ் துணை கமிஷனர், விசாரணை அதிகாரி ஆகியோர் நாளை நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'சட்டம் கொண்டு வரப்படும்'
டில்லியில் செயல்படும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை உருவாக்குவதற்காக மாணவர்கள் - அரசு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்படும். உள்கட்டமைப்பு விதிமீறல், ஆசிரியர்களின் தகுதி, கட்டணக் கட்டுப்பாடு மற்றும் தவறான விளம்பரங்களை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த சட்டத்தின் வாயிலாக சரி செய்யப்படும்.
ஆதிஷி, டில்லி அமைச்சர், ஆம் ஆத்மி