ADDED : ஜூலை 06, 2024 06:22 AM
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் நாகேந்திராவுக்கு, எஸ்.ஐ.டி., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் இவர் எழுதி வைத்த கடிதத்தில், ஆணையத்தில் நடந்த முறைகேடுகளை கூறியிருந்தார். ஆணையத்தின் கோடிக்கணக்கான பணம், சட்டவிரோதமாக தெலுங்கானாவின் கூட்டுறவு வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதை விவரித்திருந்தார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவுகள் நலத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. முறைகேடு நடந்திருப்பதால் அத்துறை அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன. போராட்டம் நடத்தின. எனவே, அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்த மாநில அரசு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் நாகேந்திராவுக்கும், வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவர் பசனகவுடா தத்தலுக்கும், அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இம்முறைகேடு குறித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.