ADDED : ஆக 15, 2024 02:36 AM
புதுடில்லி, சுதந்திர தினத்தையொட்டி, சிறந்த சேவை புரிந்த மத்திய, மாநில போலீசார் 1,037 பேருக்கு ஜனாதிபதி விருது உள்ளிட்ட பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் போலீசாரின் சிறந்த சேவைக்காக ஜனாதிபதி விருது, மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
துணிச்சல்
இந்த ஆண்டு, 1,037 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
வீர, தீரச் செயலுக்கான ஜனாதிபதி விருது, தெலுங்கானாவைச் சேர்ந்த ஹெட் கான்ஸ்டபிள் சதுவு யாதய்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ல், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, அவர்களின் கொடூரமான தாக்குதலுக்கு யாதய்யா உள்ளானார். படுகாயங்களுடன் போராடினாலும், தைரியமாக துணிச்சலுடன் குற்றவாளிகளை கைது செய்த அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி விருது உள்ளிட்ட வீர, தீரச் செயலுக்கான பதக்கங்கள் 214 பேருக்கும்; துணிச்சலான செயலுக்கான பதக்கங்கள் 231 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு 52 வீரப் பதக்கங்களும், ஜம்மு - காஷ்மீர் போலீசாருக்கு 31 பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறப்புமிக்க சேவை
உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தலா 17 போலீசாருக்கும், சத்தீஸ்கரைச் சேர்ந்த 15 பேருக்கும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறப்புமிக்க சேவைக்கான பிரிவில் இரண்டு பேருக்கும், திறம்பட சேவையாற்றிய பிரிவில் 21 பேருக்கும் என, மொத்தம் 23 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த முறை ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.