இப்போது நான் உங்கள் வீட்டு பிள்ளை சென்னபட்டணாவில் சிவகுமார் உருக்கம்
இப்போது நான் உங்கள் வீட்டு பிள்ளை சென்னபட்டணாவில் சிவகுமார் உருக்கம்
ADDED : ஜூலை 02, 2024 06:46 AM

ராம்நகர்: “சென்னப்பட்டணாவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத காரணத்தால், இப்போது நானே உங்கள் வீட்டுப் பிள்ளை,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
ராம்நகர், சென்னப்பட்டணாவின், விருபாக்ஷபுரா மாவட்ட பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ஆரளாளு சந்திரா பள்ளி வளாகத்தில், 'வாசலுக்கு வந்தது அரசு, சேவைக்கு இருக்கட்டும் உங்கள் ஒத்துழைப்பு' என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
மக்களுக்கு சேவை செய்ய, துணை முதல்வராக உங்கள் முன்னிலையில் வந்துள்ளேன். மக்களுக்காக சேவை செய்ய, வாக்காளர்கள் வாய்ப்பளித்துள்ளனர். ஜாதி பார்த்து நான் மக்களுக்கு சேவை செய்யவில்லை. நேர்மையாக பணியாற்றுகிறேன்.
உங்கள் வீட்டு வாசலுக்கு, வாய்ப்பு தேடி வந்தது. எந்த காரணத்துக்காகவும் இந்த வாய்ப்பை கை நழுவ விடாதீர்கள். உங்கள் வீட்டு வாசலுக்கு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வந்துள்ளனர். நீங்கள் எங்கள் சேவையை, பயன்படுத்த வேண்டும்.
உங்கள் சேவைக்கு என் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும். அங்கு வந்து உங்களின் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம். இதற்கு முன் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தேன். விவசாயிகளுக்கு மின்மாற்றி பொருத்துவது, நீர்ப்பாசன வசதி செய்து கொடுத்தேன்.
தொகுதி பிரிந்து, நான் கனகபுராவுக்கு சென்ற பின், எந்த எம்.எல்.ஏ.,க்களாவது மக்களிடம் வந்து பணியாற்றிய உதாரணங்கள் உள்ளதா? இல்லை. நான் யாருடனும் போட்டி போட, இங்கு வரவில்லை. உங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வந்துள்ளேன்.
லோக்சபா தேர்தலில் எங்களின் எதிர்பார்ப்பையும் மீறி, ஓட்டுப் போட்டுள்ளீர்கள். இதற்காக நன்றி செலுத்த வந்துள்ளேன். 80,000 ஓட்டுகளை கொடுத்த உங்களுக்கு, கோடி நமஸ்காரங்கள்.
ஐந்து மாவட்ட பஞ்சாயத்துகளில், 4,419 பேர் தங்கள் பிரச்னைகளை கூறி, மனு அளித்தனர். இதில் 1,996 பேர் தங்களுக்கு வீடு இல்லை என, மனு அளித்துள்ளனர். அரசு நிலம் அல்லது தனியார் நிலத்தை, அடையாளம் கண்டு ஏழைகளுக்கு வீட்டுமனை அளிக்கப்படும்.
காட்டு யானைகளின் தொந்தரவை தவிர்க்க, பன்னரகட்டாவில் இருந்து, சென்னப்பட்டணா வரை, 180 கி.மீ., நீளமான தடுப்புகள் பொருத்தப்படும்.
வாக்குறுதித் திட்டங்களால், மாமியார், மருமகள் இடையே சண்டை நடக்கும் என, பொய் கூறினர். ஆனால் இத்தகைய திட்டங்களால், உங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது.
லஞ்சம் கொடுக்காமல், ஐந்து திட்டங்களை பெற்றுள்ளீர்கள். அதே போன்று, தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் இல்லாமல், வேலையை செய்து கொடுப்பது, என் பொறுப்பு. சுரேஷுக்கு ஓட்டு போடவில்லை என, சங்கடப்படாதீர்கள். நீங்கள் எங்கள் மாவட்ட மக்கள். உங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.
யார் வந்தாலும், சென்றாலும் உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். அது என் கடமை. மிகவும் சிறிய வயதில், என்னை எம்.எல்.ஏ., ஆக்கியது நீங்கள்.
கடந்த 1985 முதல் 2008 வரை, உங்களுக்கு சேவை செய்துள்ளேன். சென்னப்பட்டணாவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத காரணத்தால், இப்போது நானே உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்கு நன்றிக்கடன் தீர்ப்பேன்.
இவ்வாறு அவர்பேசினார்.