இனி ரயில்வே போலீசாரும் டிக்கெட் இன்றி செல்ல முடியாது
இனி ரயில்வே போலீசாரும் டிக்கெட் இன்றி செல்ல முடியாது
ADDED : ஆக 06, 2024 01:26 AM
ஆமதாபாத், 'ரயிலில் பணியில் இருக்கும் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், அடையாள அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது' என, ரயில்வே உரிமைக்கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ராஜேஷ் பகுல். இவர், 2019 நவ., 13ல் பணி நிமித்தமாக சூரத் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் சென்றுவிட்டு, மீண்டும் சூரத்துக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
சூரத் - ஜாம் நகர் இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்த ராஜேஷ், பலேஜ் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை வாயிலாக மூட்டுக்கு கீழே கால் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்ததால், 8 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, ரயில்வே உரிமைக்கோரல் தீர்ப்பாயத்தில் ராஜேஷ் பகுல் முறையிட்டார். இவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், இழப்பீடு தர மறுத்துவிட்டது.
தீர்ப்பாய உத்தரவின் விபரம்:
ராஜேஷ் பகுல் பணி நிமித்தமாகத் தான் அந்த பயணத்தை மேற்கொண்டார் என்பதற்கு முறையான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லை.
ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பணி நிமித்தமாக ரயிலில் பயணிக்கும் போது, அதற்குண்டான அதிகாரப்பூர்வ பயண ஆவணம் அல்லது முறையான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
அடையாள அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் பயணம் செய்ய இயலாது. இது போன்ற நேரங்களில் அவர்கள் பணி நிமித்தமாக சென்றனரா அல்லது சொந்த வேலையாக சென்றனரா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் முறையான ஆவணங்களுடன் ரயிலில் பயணிப்பதை ரயில்வே நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.