நர்சுக்கு தொல்லை: நோயாளி கைது: மே.வங்கத்தில் நீடிக்கும் அத்துமீறல்
நர்சுக்கு தொல்லை: நோயாளி கைது: மே.வங்கத்தில் நீடிக்கும் அத்துமீறல்
ADDED : செப் 02, 2024 01:03 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், சிகிச்சையளித்த நர்சிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேற்கு வங்கம் கோல்கட்டாவில் சமீபத்தில் பயிற்சி பெண் டாக்டர், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகாத வார்த்தை
இந்நிலையில், அங்குள்ள பிர்பும் மாவட்டத்தில் உள்ள இளம்பஜார் அரசு சுகாதார நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
டாக்டரின் ஆலோசனைப்படி அங்கு பணியில் இருந்த பெண் செவிலியர் அவருக்கு சிகிச்சை அளித்தார். அப்போது, அந்த நோயாளி செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செவிலியர் கூறுகையில், 'சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நோயாளி, திடீரென என் உடல் பாகங்களை தொட்டார். அதை தட்டிக்கேட்டதற்கு என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கவும் முயன்றார்.
'எங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால்தான், இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன' என்றார். சுகாதார நிலையம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியிடம் சில்மிஷம்
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
சி.டி., ஸ்கேன் எடுக்க அவர் நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர் அமன்ராஜ், அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த சிறுமி, இது குறித்து தன் குடும்பத்தாரிடம் தெரிவித்தார். மேலும், அமன்ராஜை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.