கள்ளச்சாராய பலி விவகாரம் ஆட்டம் கண்டது ஒடிசா சட்டசபை அமைச்சர் பதவி விலக கோரி கலாட்டா
கள்ளச்சாராய பலி விவகாரம் ஆட்டம் கண்டது ஒடிசா சட்டசபை அமைச்சர் பதவி விலக கோரி கலாட்டா
ADDED : ஆக 24, 2024 02:16 AM
புவனேஸ்வர், : ஒடிசா சட்டசபையில், தொடர்ந்து நான்காவது நாளாக கள்ளச்சாராய விவகாரத்தை நேற்றும் எழுப்பிய எதிர்க்கட்சிகள், 'கலால் அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் ராஜினாமா செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டன.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
வலியுறுத்தல்
இங்கு, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சிகிடி என்ற இடத்தில், கள்ளச்சாராயம் அருந்திய இருவர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'கஞ்சம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் பரவியதற்கு, பா.ஜ., அரசு தான் காரணம்' என குற்றஞ்சாட்டிய, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், 'இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, கலால் அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியது.
இதற்கிடையே, கள்ளச்சாராயம் அருந்தி இருவர் பலியான விவகாரம் குறித்து, வருவாய் கோட்ட கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது.
ஒடிசா சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில், கள்ளச்சாராய விவகாரத்தை பிஜு ஜனதா தளம், காங்., ஆகிய எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், சட்ட சபை நேற்று காலை, 10:30 மணிக்கு வழக்கம் போல் கூடியதும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
முற்றுகை
'கலால் அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் ராஜினாமா செய்ய வேண்டும்' என, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது, பிஜு ஜனதா தளத்தின் பெண் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். ஒருசிலர், சபாநாயகர் இருக்கை பகுதிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு சபை மீண்டும் கூடியதும், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு ஒப்புக் கொண்டது.
எதிர்க்கட்சியான, பிஜு ஜனதா தளத்தின் தலைமை கொறடா பிரமிளா மல்லிக் கூறுகையில், “மதுபான மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு பயப்படுகிறது.
''உண்மையிலேயே, முந்தைய அரசின் திட்டங்களின் பெயர்களை தான் பா.ஜ., மாற்றி வருகிறது. கள்ளச்சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று, அமைச்சர் பிரித்வி ராஜ் ஹரிசந்தன் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்றார்.
காங்., சட்டசபை தலைவர் ராம சந்திர கடம் கூறுகையில், “தார்மீக அடிப்படையில், கலால் அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த பா.ஜ., அரசு தவறி விட்டது. ஒடிசா முழுதும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது,” என்றார்.