ஒடிசா முதல்வர் பட்நாயக்கின் சொத்து மதிப்பு ரூ.71.07 கோடி
ஒடிசா முதல்வர் பட்நாயக்கின் சொத்து மதிப்பு ரூ.71.07 கோடி
ADDED : மே 02, 2024 01:22 AM
பெர்ஹாம்பூர், ஒடிசா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு 71.07 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 21 லோக்சபா தொகுதி மற்றும் 147 சட்டசபை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
முதற்கட்டமாக வரும் 13ம் தேதி நான்கு லோக்சபா தொகுதிகள் மற்றும் 28 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தன் சொந்த மாவட்டமான கஞ்சத்தின் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் ஆறாவது முறையாக போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், தனக்கு 14.05 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்து களும், 57.02 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதில், புவனேஸ்வர், டில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளும் அடங்கும். இது தவிர, வைரம், ரூபிஸ் கற்கள் பதித்த ஐந்து பட்டன்கள் இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 4.17 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
தன் கையில் 30,000 ரூபாய் ரொக்கமாக உள்ளதாகவும், 1980ம் ஆண்டு மாடல் அம்பாசிடர் கார் வைத்துள்ளதாகவும், அதன் மதிப்பு தற்போது 6,434 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் தாக்கல் செய்த வருமான வரியில் தன் ஆண்டு வருவாய் 92,24,900 ரூபாய் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

