ADDED : ஆக 30, 2026 04:01 PM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா மிட்டல், 43, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
ஹரியானாவைச் சேர்ந்த திவ்யா மிட்டல், ஐ.ஐ.டி., டில்லி, ஐ.ஐ.எம்., பெங்களூரில் கல்வி பயின்று, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் பிரபல நிறுவனத்தில் பணியாற்றினார். தாயகம் திரும்பிய அவர், 2013ல், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனார்.
உ.பி.,யில் பணியை தொடங்கிய அவர், தியோரியா, மிர்சாபூர், சாந்த் கபீர் நகர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டராகவும், மாநிலத்தின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இவர் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்வதாக அவர் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் திவ்யா மிட்டல் வெளியிட்ட பதிவு:
என், 13 ஆண்டு கால ஐ.ஏ.எஸ்., பணி முடிவுக்கு வருகிறது. தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே ஐ.ஏ.எஸ்., பதவியில் இருந்து விலகுகிறேன். இதில் எந்த அழுத்தமும் இல்லை. லண்டனில் வேலை கிடைத்த போதும், நாட்டுக்கு எதையாவது செய்ய வேண்டும் என, எண்ணினேன். நன்றிக்கடன் செலுத்துவதற்காக தாயகம் வந்தேன். அதிர்ஷ்டவசமாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனேன்.
உண்மைக்காக குரல் கொடுப்பது கடமை என்பதை தியோரியா மாவட்டமும், சாத்தியமற்றது என்பது வெறும் கருத்து மட்டுமே தவிர உண்மை அல்ல என்பதை மிர்சாபூர் மாவட்டமும் எனக்கு கற்பித்தன. சமூகத்திற்கு எதையாவது கொடுப்பதற்காகவே அரசுப் பணியில் சேர்ந்ததாக தொடக்கத்தில் நினைத்தது முட்டாள்தனம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
திவ்யா மிட்டலின் கணவர் ககன்தீப் சிங்கும், 2022ல், ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
