மாநகராட்சியின் மின் பிரிவு அதிகாரிகள் இரவு 8:30 மணி வரை பணிபுரிய உத்தரவு
மாநகராட்சியின் மின் பிரிவு அதிகாரிகள் இரவு 8:30 மணி வரை பணிபுரிய உத்தரவு
ADDED : மே 10, 2024 05:21 AM

பெங்களூரு : ''பெங்களூரு மாநகராட்சியின், மின் பிரிவு அதிகாரிகள், பொறியாளர்கள் இரவு 8:30 மணி வரை பணியாற்ற வேண்டும்,'' என மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
மழை பெய்வதால் அசம்பாவிதம் ஏற்படுகிறது. மின்சாரம் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து, அதிகமான புகார்கள் வருகின்றன. குறிப்பாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அதிகமான புகார்கள் வருகின்றன.
தெரு விளக்குகள் நிர்வகிப்புக்கு நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் காலா காலத்துக்கு, தெரு விளக்குகளை சரி செய்யாதது எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. இதை பெங்களூரு மாநகராட்சியின் மின்சார பிரிவு சரியாக மேற்பார்வையிடவில்லை.
மின்சார பிரிவு அதிகாரிகளின் பணி நேரம் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்சார பிரிவின் அனைத்து பொறியாளர்கள், செயல் நிர்வாக பொறியாளர், உதவி செயல் நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர்கள், ஒப்பந்த பொறியாளர்கள் பணியாற்ற வேண்டும்.
பெங்களூரில் மழை பெய்யும் போது, எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது. மெட்ரோ பணிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று, மழை நீர் சுமுகமாக வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை நீர் கால்வாய், சாலை ஓர சாக்கடைகளில் விரைந்து அடைப்புகளை சரி செய்ய வேண்டும். கன மழை பெய்யும் போது, சாலைகளில் நீர் நின்று, வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல், பார்த்து கொள்ள வேண்டும்.
மழைக்கு முறிந்து விழும் மரங்கள், மரக்கிளைகளை விரைந்து அப்புறப்படுத்த, 28 குழுக்கள் செயல்படுகின்றன. தற்போது கூடுதலாக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பணிகளின் போது போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கில், மண்டல வாரியாக எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலை ஓரங்கள், மழைநீர் கால்வாய்கள் அருகில், கட்டட கழிவுகளை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும். இது குறித்து, திட கழிவு பிரிவு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.