நிலுவையில் உள்ள 14 ரயில் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
நிலுவையில் உள்ள 14 ரயில் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 19, 2024 05:21 AM

பெங்களூரு : ''கர்நாடகாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்பது புதிய ரயில்பாதைகள்; ஐந்து இரட்டை வழிப்பாதைகளை விரைந்து முடிக்க வேண்டும்,'' என அதிகாரிகளுக்கு, மத்திய ரயல்வே இணை அமைச்சர் சோமண்ணா உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் பல ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் சோமண்ணா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
துமகூரு - கல்யாண்துர்க் - ராயதுர்க்; துமகூரு - சித்ரதுர்கா - தாவணகெரே; கினிகேரா - ராய்ச்சூர்; பாகல்கோட் - குடச்சி; கதக் - வாடி; கடூர் - சிக்கமகளூரு; ஷிவமொகா - ஷிகாரிபுரா - ராணிபென்னுார்; பெலகாவி - கித்துார் - தார்வாட்; ஹாசன் - பேலுார் ஆகிய 1,264 கி.மீ.,க்கு ஒன்பது புதிய ரயில்பாதைகளும்;
ஹோட்கி - குட்கி - கதக்; யஷ்வந்த்பூர் - சென்னசந்திரா; பையப்பனஹள்ளி - ஓசூர்; பெங்களூரு - ஒயிட்பீல்டு; ஹொஸ்பேட் - ஹூப்பள்ளி - லோண்டா - தினாய்கட் - வாஸ்கோடகாமா ஆகிய 707 கி.மீ.,க்கு ஐந்து இரட்டை வழித்தடங்கள் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
இதில், ஏற்கனவே 289 கி.மீ., புதிய ரயில்பாதை; 502 கி.மீ.,க்கான இரட்டைப்பாதை பணிகள் முடிந்துள்ளன. நிலுவையில் உள்ள பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை, விரைவுபடுத்த வேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் முறையாக முடிக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பை அதிகரிக்கவும், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் அனைத்து 'லெவல் கிராசிங்கு'களையும் அகற்றும் அரசின் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
பெங்களூரை சுற்றி உள்ள லெவல் கிராசிங்குகளை சரி பார்த்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடகாவில் பல்வேறு ரயில் பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா ஆலோசனை நடத்தினார். இடம்: பெங்களூரு.

