ADDED : ஆக 30, 2024 09:54 PM

கலபுரகி: பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு, சொந்தமான சர்க்கரை ஆலையில், கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விஜயபுரா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால். இவருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை, கலபுரகி சிஞ்சோலியில் உள்ளது. சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்கவில்லை என கூறி, கடந்த ஜனவரியில் 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், சர்க்கரை ஆலைக்கு சீலும் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பசனகவுடா பாட்டீல் எத்னால் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆலையை திறக்க உத்தரவிட்டது. ஆனாலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆலையை திறக்க அனுமதிக்கவில்லை.
இதை கண்டித்து பெங்களூரு அசோக் நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், எத்னால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எத்னாலின் சர்க்கரை ஆலையில், கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். ஆலையில் உற்பத்தி பிரிவு உட்பட சில பகுதிகளை புகைப்படம், வீடியோக்கள் எடுத்துக் கொண்டனர்.
ஆலையை திறக்க அனுமதித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ள நிலையில், எத்னால் சர்க்கரை ஆலையில் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பசனகவுடா பாட்டீலின் ஆலையில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன், அனுமதி பெறாமல் லட்சக்கணக்கான டன் கரும்புகளை பிழிந்து, எத்தனால் உற்பத்தி செய்தனர்.
ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆற்றில் கலப்பதாக குற்றஞ்சாட்டி, ஆலையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடியது.
மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்கள், பா.ஜ.,வினர் பேரணி நடத்தினர். வியாபாரிகளும் கடைகளை மூடிவிட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.
இதற்கிடையில் கரும்புச்சாற்றில் இருந்து, எத்தனால் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், எத்னால் நிம்மதி அடைந்துள்ளார்.