ஒக்கலிகர்கள் முட்டாள் இல்லை! துணை முதல்வர் சிவகுமார் பேட்டி
ஒக்கலிகர்கள் முட்டாள் இல்லை! துணை முதல்வர் சிவகுமார் பேட்டி
ADDED : ஏப் 11, 2024 05:11 AM

பெங்களூரு: மடாதிபதி நிர்மலானந்த சுவாமியை, பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்கள் சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த, துணை முதல்வர் சிவகுமார், “ஒக்கலிகர்கள் முட்டாள் இல்லை,” என்றார்.
லோக்சபா தேர்தலில் பழைய மைசூரில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும், பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்கள் குமாரசாமி தலைமையில் நேற்று, பெங்களூரில் உள்ள ஒக்கலிக சமூகத்தின் ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு சென்றனர்.
6 பேருக்கு சீட்
மடாதிபதி நிர்மலானந்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றனர். இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு, 'சீட்' கொடுத்துள்ளது. ஒக்கலிகரான நான் துணை முதல்வராகவும், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளேன். நானும் எல்லாவற்றிக்கும் தயாராக உள்ளேன்.
ராம்நகரில் காங்கிரசார் 5,000 ரூபாய்க்கு டோக்கன் கொடுப்பதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் எதுவும் செய்யவில்லையா? பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்கள், ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு சென்றுஉள்ளனர்.
4ல் தோல்வி
மடாதிபதி நிர்மலானந்த சுவாமி ஆசிர்வதித்து அனுப்பி உள்ளார். இதில் தவறு இல்லை. தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்களும், மடங்களுக்கு செல்வது இயல்பு தான். குமாரசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியது பா.ஜ.,வினர் தான்.
இப்போது அவர்களுடன் கைகோர்த்து, குமாரசாமி மடத்திற்கு செல்கிறார். ஒக்கலிகரான குமாரசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியது ஏன் என, பா.ஜ., தலைவர்களிடம், மடாதிபதி நிர்மலானந்த சுவாமி கேட்டு இருக்கலாம்.
அப்படி கேட்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறதா, இல்லையா என்று கூட எனக்கு தெரியவில்லை. ஒக்கலிகர்கள் முட்டாள்கள் இல்லை.
மாண்டியாவில் வெற்றி பெற்றால் குமாரசாமி மத்திய அமைச்சர் ஆவார் என்று சொல்கின்றனர். அவருக்கு நல்லது நடக்கட்டும். மாண்டியா, ஹாசன், கோலார், பெங்களூரு ரூரல் ஆகிய நான்கு தொகுதிகளிலும், ம.ஜ.த., - பா.ஜ., வேட்பாளர்கள் தோல்வி அடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

