முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சிவகுமார் மீது ஒக்கலிகர்கள் கொதிப்பு
முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சிவகுமார் மீது ஒக்கலிகர்கள் கொதிப்பு
ADDED : ஏப் 13, 2024 05:48 AM

முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு, விட்டுக் கொடுத்த சிவகுமார் மீதுள்ள அதிருப்தியை, ஒக்கலிகர் சமுதாயத்தினர் வெளிப்படுத்தி உள்ளனர். 'முதல்வர் பதவியை ஏன் விட்டு கொடுத்தீர்கள்?' என, காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
கர்நாடக காங்கிரசில், சிவகுமார் மிகவும் செல்வாக்கான தலைவர். பிரபலமான ஒக்கலிகர் சமுதாய தலைவர். கட்சி, கஷ்டகாலத்தை சந்தித்த தருணங்களில், கைகொடுத்து உதவியவர். கட்சி மேலிட அளவில் இவருக்கு செல்வாக்கு உள்ளது. அப்படி இருந்தும், அவரால் ஒரு முறையும் முதல்வராக முடியவில்லை.
நழுவ விட்ட பரமேஸ்வர்
கடந்த 2013ல், காங்கிரஸ் அரசு அமைந்தபோது, பரமேஸ்வர் மாநில தலைவராக இருந்தார். இவருக்கு முதல்வராக வாய்ப்பு இருந்தது. ஆனால் இவர் கொரட்டகரே தொகுதியில் தோற்றதால், முதல்வராகும் வாய்ப்பை இழந்தார். சித்தராமையா முதல்வரானார்.
தன் தோல்விக்கு சித்தராமையாவின் உள்குத்து வேலையே காரணம் என்ற வருத்தம், பரமேஸ்வருக்கு உள்ளது.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு அமைந்தது. ஓராண்டே அரசு இருந்தது. இந்த அரசு கவிழ்ந்து பா.ஜ., அரசு அமைந்தது.
அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் கூட, கட்சி மண்ணை கவ்வியது. தோல்விக்கு பொறுப்பேற்று, மாநில காங்.,சின் அன்றைய தலைவர் தினேஷ் குண்டுராவ் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2020 மார்ச் மாதம், சிவகுமார் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். பொதுவாக கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநில தலைவராக இருப்பவரே முதல்வராவார்.
எனவே முதல்வர் பதவி மீது கண் வைத்திருந்த சிவகுமார், மாநிலத்தை சுற்றி வந்து, கட்சியை பலப்படுத்தினார். வேறு கட்சிகளின் தலைவர்களை காங்கிரசுக்கு ஈர்த்தார். அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர்களை சமாதானம் செய்தார்.
சிறப்பான திட்டங்கள்
காங்கிரசில் இருந்து வெளியேறியவர்களை, மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்தார். 2023 சட்டசபை தேர்தலுக்கு, சிறப்பான திட்டங்களை வகுத்தார். 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் கட்சி ஆட்சிக்கு வந்ததில், சிவகுமாரின் பங்களிப்பு அதிகம். இவரே முதல்வராவார் என்ற நம்பிக்கையில், ஒக்கலிக சமுதாயத்தினர் காங்கிரசை ஆதரித்தனர்.
தேர்தல் முடிவு வெளியானபோது, இவரை முதல்வராக மேலிடம் அறிவிக்கும் என, சமுதாயத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் சித்தராமையாவும், முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் பிடித்தார்.
பதவிக்காக சிவகுமார், சித்தராமையா இடையே பலத்த போட்டி எழுந்தது. காங்., மேலிடம் இருவரையும் டில்லிக்கு வரவழைத்து, பேச்சு நடத்தியது. யாரும் பிடிவாதத்தை தளர்த்தவில்லை.
எனவே இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் முதல்வராக இருக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்படிசித்தராமையா முதல்வரானார். சிவகுமார் அரைமனதுடன் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
சித்தராமையா அரசு அமைந்து, ஓராண்டு நெருங்குகிறது. இதற்கிடையில் லோக்சபா தேர்தல் வந்துள்ளது. இந்த தேர்தல் முடிந்த பின், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் ஏற்படலாம் என, காங்கிரசாரே கூறுகின்றனர். சிவகுமார் முதல்வராகலாம் என, கூறப்படுகிறது. இதை தடுக்க சித்தராமையா ஆதரவாளர்கள் இப்போதிருந்தே முயற்சிக்கின்றனர்.
கடும் அதிருப்தி
முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால், சிவகுமார் மீது ஒக்கலிகர் சமுதாயத்தினர் அதிருப்தியில் இருந்தனர். இப்போது அதை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர்.
கர்நாடக ஒக்கலிகர் சங்க இயக்குனர் நெல்லிகெரே பாலு கூறியதாவது:
சட்டசபை தேர்தலின்போது, சிவகுமாரை எங்கள் தலைவராக ஒப்புக்கொண்டோம். இவர் ஒரு முறையாவது முதல்வராக வேண்டும் என, ஒக்கலிகர் சமுதாயத்தினர் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டோம். ஆனால் அவர் முதல்வராகவில்லை.
தேர்தலுக்கு முன்பு, ஒக்கலிகர் சமுதாயத்தினருக்கு, அதை செய்வோம், இதை செய்வோம் என, வாக்குறுதி அளித்தனர். ஆனால் எதையும் செய்யவில்லை. இந்த அரசில் சிவகுமாரின் பேச்சு எடுபடவில்லை. பல முறை நாங்கள் அவரை சந்தித்தோம். சித்தராமையாவிடம், சிவகுமாரின் பேச்சுக்கு மதிப்பில்லை.
இதற்கு முன்பு குமார சாமியை ஆதரித்தோம். அவரும் விவசாயிகளின் கடனை ரத்து செய்தார். ஆனால் நீங்கள் (சிவகுமார்) என்ன செய்தீர்கள்? தேர்தல் வந்தால் மட்டும், ஒக்கலிகர் சமுதாயத்தினர் நினைவுக்கு வருகின்றனர்.
மாநில காங்கிரஸ் தலைவராக, 135 தொகுதிகளை கைப்பற்றி கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்.
இவர் ஏன் முதல்வர் பதவியை கேட்கவில்லை? பதவியை சித்தராமையாவுக்கு, சிவகுமார் விட்டு கொடுத்தது ஏன்? சிவகுமார் அண்ணாவின் 'மீட்டர் ஆப்' ஆகிவிட்டதா? இவரது சக்தி என்ன என்பது, எங்கள் சமுதாயத்தினருக்கு தெரியும். எனவே இனி தேவகவுடா, குமாரசாமியே எங்கள் தலைவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

