ADDED : மே 28, 2024 06:12 AM

தட்சிண கன்னடா: பெல்தங்கடியில் விறகு சேகரிக்க வனப்பகுதியில் வழி தவறி சென்று ஆறு நாட்களாக தவித்த 83 வயது முதியவர், பத்திரமாக மீட்கப்பட்டார்.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடியின் ஷிபாஜே கிராமத்தை சேர்ந்தவர் வாசு ரன்யா, 83. மே 21ம் தேதி விறகு சேகரிப்பதற்காக, பண்டிஹொளே வனப்பகுதிக்கு சென்றார்.
அவரது குடும்பத்தினர், மதியம் வந்துவிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் வரவில்லை.
இதையடுத்து அவர்களும், அண்டை வீட்டினரும் வனப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.
மறுநாள், காணாமல் போனவர்களை தேடித்தரும், 'சவுரியா குழுவினருக்கு' தகவல் தெரிவித்தனர். அவர்களும் முதியவரை தேடினர். இவ்வாறு ஐந்து நாட்கள் கடந்தன. நேற்று முன்தினம் காலை, தேடி கொண்டிருந்த போது, யாரோ கூப்பிடுவது போன்று அவர்களுக்கு கேட்டது.
ஒலி வந்த திசையை நோக்கி சென்றபோது, வாசு ரன்யா கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மீட்டு, காக்கடா சமுதாய மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவர் கூறுகையில், ''விறகு பறிக்கும் போது யாரோ என்னை கூப்பிடுவது போன்று கேட்டது. ஒலி வந்த திசையை நோக்கி சென்றேன். ஆறு நாட்களும் உணவு எதுவும் சாப்பிடாமல், என்னிடம் இருந்த தண்ணீரை மட்டுமே குடித்து வந்தேன்,'' என்றார்.