ADDED : பிப் 24, 2025 05:12 AM

தட்சிண கன்னடா: குடிபோதையில் பஸ்சில் ஏறிய பயணியை, நடத்துநர் காலால் உதைத்து தள்ளிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. நடத்துநரை பலரும் கண்டித்துள்ளனர். இந்த வீடியோ இரண்டு ஆண்டு பழையது என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தட்சிண கன்னடா, புத்துாரின், ஈஸ்வர மங்களாவில், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் பயணித்த நபர் ஒருவர், குடிபோதையில் இருந்தார். அவரை கீழே இறங்கும்படி, நடத்துநர் சுகராஜ் ராய் கூறினார். பயணி இறங்க மறுத்துள்ளார். அவரை நடத்துநர், காலால் உதைத்து பஸ்சில் இருந்து கீழே தள்ளினார்.
பயணியரை உதைத்து தள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. பலரும் நடத்துநரை கண்டித்தனர். இது மனிதநேயமற்ற செயல் என்றனர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
ஆனால் அந்த வீடியோ துணுக்கு, நேற்று நடந்த சம்பவம் அல்ல. 2022ன் செப்டம்பர் 7ம் தேதி நடந்த சம்பவமாகும். பழைய வீடியோவை இப்போது வெளியிட்டு உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.