ADDED : ஜூலை 31, 2024 10:07 PM
திலக்நகர்: மேற்கு டில்லியில் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.
திலக் நகர் பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகல் 2:30 மணி அளவில் பீனா, 60, அவரது மகள் தன்யா, 35, ஆகிய இருவரும் தங்கள் உறவினர் ராகுல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்னை குறித்து ராகுலிடம் அவர்கள் பேச்சு நடத்தச் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரையும் ராகுல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இருவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பீனா உயிரிழந்தார்.
தன்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மது போதைக்கு அடிமையான ராகுல், அக்கம் பக்கத்தினருடன் எப்போதும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர்.