ADDED : ஏப் 13, 2024 12:51 AM

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா லோக்சபா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று அறிவித்துள்ளது.
இதையடுத்து, 20 ஆண்டு களுக்கு பின், ஒமர் அப்துல்லா மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தொகுதி பங்கீடு
பாதுகாப்பு காரணங்களால் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கும், தலா ஒன்று என்ற வீதத்தில், ஐந்து கட்டங்களாகவும், யூனியன் பிரதேசமான லடாக் லோக்சபா தொகுதிக்கு வரும் மே 20ம் தேதியும் லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதன்படி, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் மொத்தம் உள்ள ஆறு லோக்சபா தொகுதிகளில் தலா மூன்று இடங்களில் போட்டியிட இரு கட்சியினரும் முடிவு செய்தனர். இதில், உதம்பூர், ஜம்மு மற்றும் லடாக்கில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இதேபோல் அனந்த்நாக், ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி களமிறங்குகிறது.
பாரமுல்லா தொகுதி
இதில் அனந்த்நாக் தொகுதியில், அக்கட்சியின் மூத்த தலைவர் மியான் அல்டாப் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மற்ற இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளரை, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் கட்சி சார்பில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் ஷியா முஸ்லிம் தலைவர் அஹா சையது ருஹால்லா மெஹதி போட்டியிட உள்ளார். இதேபோல் பாரமுல்லா தொகுதியில் ஒமர் அப்துல்லா களமிறங்க உள்ளார்,” என்றார்.
கடந்த 2004ம் ஆண்டுக்கு பின் தற்போது மீண்டும் லோக்சபா தேர்தலில், ஒமர் அப்துல்லா போட்டியிட உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்ட பின், தொகுதி மறுவரையறைக்கு உட்படுத்தப்பட்ட பாரமுல்லா லோக்சபா தொகுதியில் ஒமர் அப்துல்லா களமிறங்க உள்ளார்.

