திருமண நாளில் நடந்த வெட்டு, குத்து மணமகளை தொடர்ந்து மணமகனும் பலி
திருமண நாளில் நடந்த வெட்டு, குத்து மணமகளை தொடர்ந்து மணமகனும் பலி
ADDED : ஆக 09, 2024 12:12 AM

தங்கவயல்: ஆந்திர மாநிலம், குப்பம் மாவட்டம், சந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன், 24. இவரது சகோதரி மோனிகா, கர்நாடகாவின் தங்கவயல் கெம்பாபுரா அருகே, சம்பரசன ஹள்ளியில் வசித்து வருகிறார்.
ரத்தக்கறை
அவரை பார்ப்பதற்காக சம்பரசன ஹள்ளிக்கு நவீன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு, ஆறு மாதத்திற்கு முன் லிகிதாஸ்ரீ, 21, என்ற பெண்ணை பார்த்துள்ளார்.
அப்பெண்ணை திருமணம் செய்ய விரும்பி, குடும்பத்தினருடன் சென்று பெண் கேட்டுள்ளார். லிகிதாஸ்ரீ குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன்பின், நவீன் -- லிகிதாஸ்ரீ இருவரும் மொபைல் போனில் பரஸ்பரம் பேசி வந்தனர்.
இந்நிலையில், நவீன் வலியுறுத்தி கேட்டு கொண்டதால், அவசர அவசரமாக கடந்த 7ம் தேதி காலை 7:00 மணிக்கு இருவருக்கும் திருமணம் முடித்தனர். முதல் நாள் இரவு தான் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்கினர்.
திருமணம் முடிந்ததும், அன்று மாலை அருகில் இருந்த உறவினர் வீட்டில் மணமக்கள் இருவரும் தனியறையில் இருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
மாலை 5:30 மணியளவில் லிகிதாஸ்ரீயின் அலறல் கேட்டு, உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு இருவரும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அருகில் அரிவாள், உருட்டுக்கட்டை ரத்தக் கறையுடன் கிடந்தன. இருவரையும் தங்கவயல் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், லிகிதாஸ்ரீ இறந்து விட்டது தெரிந்தது.
விசாரணை
மிகவும் கவலைக்கிடமாக இருந்த நவீனை, கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நவீனும் உயிரிழந்தார். இருவருக்கும் இடையில் என்ன பிரச்னை; ஏன் வெட்டிக் கொண்டனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.