ஒருநாள் மாதவிடாய் விடுப்பு ஒடிசா மாநில அரசு அறிவிப்பு
ஒருநாள் மாதவிடாய் விடுப்பு ஒடிசா மாநில அரசு அறிவிப்பு
ADDED : ஆக 16, 2024 12:41 AM
புவனேஸ்வர், 'அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும்' என, ஒடிசா அரசு நேற்று அறிவித்தது.
ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
தனியார் நிறுவனம்
இங்குள்ள கட்டாக் மாவட்டத்தில், சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது துணை முதல்வர் பிரவதி பரிதா பேசியதாவது:
ஒடிசாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், மாதவிடாய் காலங்களில் முதல் அல்லது இரண்டாவது நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள், ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக நாடு முழுதும் அதிகரித்து வருகிறது.
சட்டம்
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக மாதிரி கொள்கையை வகுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தியது. இருப்பினும், அது தொடர்பான சட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் இந்த ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகளில் சிவில் சொசைட்டி மாநாட்டில், ஒடிசாவைச் சேர்ந்த ரஞ்சிதா பிரியதர்ஷினி என்ற பெண் சமூக ஆர்வலர், மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கக் கோரி குரல் எழுப்பினார்.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாயின் உடல் வலியால் பாதிக்கப்படுவதாகவும் அவர் வாதிட்டார்.
இந்நிலையில், கேரளா, பீஹார் மாநில அரசுகளைத் தொடர்ந்து, மூன்றாவதாக பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

