துப்புரவு தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை
துப்புரவு தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை
ADDED : ஜூலை 02, 2024 11:01 PM

பெங்களூரு : 'கர்நாடகாவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும்' என, நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
நகரை சுத்தமாக வைத்திருப்பதில், துப்புரவுத் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. தினமும் அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடி, சாலையை சுத்தம் செய்ய துவங்குவர். 10:00 மணி வரை தங்கள் பணி செய்த பிறகே காலை உணவு சாப்பிடுகின்றனர். பின், வீட்டிற்குச் செல்வர்.
இவர்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களிலும் கூட, காலையில் தங்கள் பணியை முடித்த பின்னரே தங்கள் வீட்டுக்குச் சென்று கொண்டாடுவர்.
இந்நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
கர்நாடகா முழுதும் உள்ளாட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதில், சில நிபந்தனைகளும் உள்ளன.
நிபந்தனைகள்
l வாரத்தில் ஆறு நாட்கள் எந்தவித விடுமுறையோ, தாமதமோ இல்லாமல் வர வேண்டும். அவர்களின் வருகைப் பதிவு, 85 சதவீதத்துக்கு மேல் இருந்தால், மட்டுமே வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்
l இயற்கை சீற்றம், உள்ளூர் திருவிழா, பண்டிகை உள்ளிட்ட நேரங்களில், வாராந்திர விடுமுறை வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது.
l இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், விடுமுறை வழங்குவது குறித்து முடிவெடுக்கலாம்
l ஊழியர் ஒருவர் விடுமுறை எடுத்தால், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில், விடுமுறை எடுத்த சம்பந்தப்பட்ட பணியாளர் எல்லைக்கு உட்பட்ட பகுதியை, வேறு பணியாளர் சுத்தம் செய்ய வேண்டும்
l பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு, வாரத்தில் புதன், ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 11:00 மணி வரை இரண்டு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.