ADDED : மே 03, 2024 11:29 PM
ஷிவமொகா : காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஷிவமொகா மாவட்டம், ரிப்பன் நகரை அடுத்துள்ள அரசலு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பசவபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா மடிவாளா, 54. நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க வனப்பகுதி அருகே சென்றுள்ளார்.
அப்போது உணவு தேடி ஒற்றை காட்டு யானை அங்கு வந்துள்ளது. தப்பி ஓட முயன்ற அவரை யானை விரட்டிச் சென்று துாக்கிப்போட்டு மிதித்தது. இதை பார்த்த அப்பகுதியினர், கூச்சலிட்டு யானையை விரட்டியடித்தனர். திம்மப்பாவை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது கிராமத்தினர், 'மக்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும். வன விலங்குகள் தொல்லையால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறோம்' என்றனர்.
அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ரிப்பன்பேட் போலீசார் விசாரிக்கின்றனர்.