தாய் - மகனை கொன்று கிணற்றில் வீச்சு ஓராண்டுக்கு பின் கள்ளக்காதலன் கைது
தாய் - மகனை கொன்று கிணற்றில் வீச்சு ஓராண்டுக்கு பின் கள்ளக்காதலன் கைது
ADDED : மார் 25, 2024 06:40 AM

விஜயபுரா: தாய் - மகனை கொன்று உடலை கிணற்றில் வீசிய வழக்கில், ஒரு ஆண்டுக்கு பின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
விஜயபுரா ரூரல் சித்தாபுரா கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில், கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி ஒரு பெண் மற்றும் சிறுவன் உடல்கள் அழுகிய நிலையில் மிதந்தன. உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் யார் என தெரியாததால், போலீசாரே உடலை அடக்கம் செய்தனர்.
கிணற்றில் மிதந்த டிராலி பைகளும், அதில் இருந்த பொருட்களும், விஜயபுரா ரூரல் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், மைசூரு போலீஸ் நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தாயும், மகனும் ஓராண்டாக மாயமாகி விட்டதாக ஒரு புகார் பதிவானது.
தாய், மகன் குறித்த விபரங்களை, மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், மைசூரு போலீசார் அனுப்பி வைத்து இருந்தனர்.
கள்ளக்காதல்
இதையடுத்து மைசூரு போலீசாரை, விஜயபுரா ரூரல் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். மாயமான தாய், மகன் அடையாளம் குறித்து கேட்ட போது, கிணற்றில் பிணமாக மிதந்த பெண், சிறுவன் என்று தெரிந்தது. இதன்பின்னர் அந்த பெண்ணின் மொபைல் நம்பரை வாங்கிய விஜயபுரா போலீசார், கடைசியாக அவர் யாரிடம் பேசினார் என்று, ஆய்வு செய்தனர்.
விஜயபுராவின் சாகர் நாயக், 40 என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சாகர் நாயக்கை பிடித்து, போலீசார் விசாரித்தனர். தாய், மகனை கொன்று கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
கொலையான பெண் மைசூரின் ஸ்ருதி, 35. கணவரை பிரிந்த அவர் மகன் ரோஹன், 13 என்பவருடன், தனியாக வசித்தார். இந்நிலையில், மைசூருவுக்கு வேலை விஷயமாக வந்த சாகர் நாயக்கிற்கும், ஸ்ருதிக்கும் முகநுால் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
தகராறில் கொலை
இதற்கிடையில், ஸ்ருதிக்கு வேறு சிலருடன் தொடர்பு இருக்கலாம் என்று, கள்ளக்காதலனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் ஸ்ருதியிடம் சொல்லாமல் அவர் விஜயபுரா வந்து விட்டார். அவரை தேடி ஸ்ருதியும், ரோஹனும் விஜயபுரா வந்தனர். சிந்தகி சாலையில் உள்ள லாட்ஜில் ஸ்ருதியை, சாகர் நாயக் சந்தித்தார். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
கோபத்தில் ஸ்ருதி கழுத்தை நெரித்து, சாகர் நாயக் கொலை செய்தார். இந்த கொலையை ரோஹன் நேரில் பார்த்ததால், அவரையும் கழுத்தை நெரித்து, சாகர் நாயக் கொன்று உள்ளார். பின் இருவரின் உடல்களையும் அவர்கள் கொண்டு வந்த டிராலியில் வைத்து எடுத்து சென்று, கிணற்றில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த இரட்டை கொலையில் ஒரு ஆண்டுக்கு பின்பு, சாகர் நாயக் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

