மைகோ சிக்னல் - ஆனேபாளையா சந்திப்பு பன்னரகட்டா சாலையில் ஓராண்டு மூடல்
மைகோ சிக்னல் - ஆனேபாளையா சந்திப்பு பன்னரகட்டா சாலையில் ஓராண்டு மூடல்
ADDED : மார் 31, 2024 03:52 AM
பெங்களூரு, : மெட்ரோ பணிகளுக்காக, பன்னரகட்டா பிரதான சாலையில், மைகோ சிக்னலில் இருந்து, ஆனேபாளையா சந்திப்பு வரையிலான சாலை, ஓராண்டு மூடப்படுகிறது.
இது தொடர்பாக, பி.எம்.ஆர்.சி.எல்., நேற்று வெளியிட்ட அறிக்கை:
காளேன அக்ரஹாராவில் இருந்து, நாகவாராவுக்கு இணைப்பு ஏற்படுத்தும் மெட்ரோ ரயில்பாதை, மிக நீளமான சுரங்க பாதை கொண்டிருக்கும். 21.26 கி.மீ., பாதை அமைகிறது. இதில் 13.76 கி.மீ., சுரங்க பாதையாகும்.
தற்போது பணிகள் மும்முரமாக நடக்கின்றன. 2025ன் இறுதிக்குள், இந்த பாதையில் வர்த்தக போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. லக்கசந்திரா சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தின், தெற்கு பகுதியில் பணிகள் நடக்கின்றன.
எனவே பணிகள் தடையின்றி நடக்கும் நோக்கில், ஏப்ரல் 1 முதல், ஓராண்டு வரை பன்னரகட்டா பிரதான சாலையில், மைகோ சிக்னலில் இருந்து, ஆனேபாளையா சந்திப்பு வரையிலான சாலை மூடப்படுகிறது.
பன்னரகட்டா பிரதான சாலையில், டெய்ரி சதுக்கம் பகுதியில் இருந்து ஆனேபாளையா சந்திப்புநோக்கி செல்லும் வாகனங்கள், மைகோ சிக்னலில் வலது புறமாக திரும்பி, போஸ் லிங்க் சாலை வழியாக, ஆடுகோடி சிக்னலை அடைந்து, இடது புறம் திரும்பி, முன்னோக்கிச் செல்லலாம்.
ஆனேபாளையா சந்திப்பில் இருந்து, டெய்ரி சதுக்கத்தை நோக்கி வரும் வாகனங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.
டெய்ரி சதுக்கத்தில் இருந்து, சாந்திநகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வில்சன் கார்டன் 7வது பிரதான சாலையில், இடதுபுறமாக திரும்பி, முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

