அக்., 24 முதல் 11 நாட்கள் ஹாசனாம்பா கோவில் திறப்பு
அக்., 24 முதல் 11 நாட்கள் ஹாசனாம்பா கோவில் திறப்பு
ADDED : ஆக 15, 2024 04:40 AM

ஹாசன், : ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும், ஹாசனாம்பா கோவில், நடப்பாண்டு அக்டோபர் 24 முதல் 11 நாட்கள் திறக்கப்பட உள்ளது. இம்முறையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுவது வழக்கம். ஹாசனாம்பாவை, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவர்.
கடந்த முறை கோவில் உண்டியலில், 2 கோடியே 55 லட்சத்து 41 ஆயிரத்து 497 ரூபாய் ரொக்கம், 62 கிராம் தங்கம், 161 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.
தவிர தரிசன டிக்கெட், பிரசாதம் விற்பனையால் 6.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
இம்முறை உண்டியல் வருவாய் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாசனாம்பா கோவிலில் பல அற்புதங்கள் நடக்கின்றன. மூலஸ்தானத்தில் எரியும் விளக்கு, நெய் காலியானாலும் அணைவதில்லை. 11 நாட்கள் வழிபாட்டுக்குப் பின், கோவில் நடை மூடும் போது அம்பாள் சன்னிதியில் நைவேத்தியம் வைக்கப்படுகிறது.
இது, அடுத்த முறை திறக்கும் வரை கெடாமல் இருப்பதாக ஐதீகம்.
ஹாசன் கோவில் திருவிழா குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஹாசன் எம்.பி., ஷ்ரேயஸ் படேல், எம்.எல்.ஏ., ஸ்வரூப் பிரகாஷ், கலெக்டர் சத்திய பாமா உட்பட பலர் பங்கேற்றனர்.
அக்டோபர் 24 முதல், 11 நாட்கள் ஹாசனாம்பாளின் தரிசனம் கிடைக்கும். இம்முறை 13 முதல் 15 லட்சம் பக்தர்கள் வருகை தரும் வாய்ப்பு உள்ளது.
தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யும்படி, போலீசாருக்கு எம்.பி., உத்தரவிட்டார்.