ADDED : செப் 13, 2024 08:01 AM

பெங்களூரு: பி.எம்.டி.சி., சார்பில் டீசலில் இயங்க கூடிய, 100 புதிய பஸ்களை, முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார்.
பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குவரத்து கழகம் சார்பில், டீசலில் இயக்க கூடிய 840 புதிய 'பி.எஸ்., - 6' வகை பஸ்களை, 336 கோடி ரூபாயில் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதில், முதல் கட்டமாக, 100 பஸ்களை முதல்வர் சித்தராமையா நேற்று, பெங்களூரு விதான் சவுதாவில் பச்சை கொடி காண்பித்து துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது: பெங்களூரு நகரில் மக்கள் தொகை பெருகி வருகிறது. அதிகரித்து வரும் தொழிலாளர்கள் நலன் கருதி, புதிய பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டன.
கூடுதல் இந்திரா மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்.
உழைக்கும் வர்க்கத்தினரின் நலன் கருதி, 'சக்தி' திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், வாக்குறுதி திட்டங்களுக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், நான்கு முறை புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் ராலிமங்கரெட்டி, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமார், பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் ராமசந்திரன் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
'பி.எஸ்., - 6' வகை பஸ்களின் சிறப்பம்சங்கள்:
l சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், மாசு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
l 11 மீட்டர் நீளமான பஸ். டீசலில் இயங்க கூடியது
l 41 இருக்கைகள் கொண்டது. வசதியாக அமரும் வகையில், உயர்ந்த இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன
l பயணியரின் செயல்பாடுகளை கண்காணிக்க, 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளன
l முன் பகுதி, பின் பகுதி, படிக்கட்டுகள் இருக்கும் நடுப்பகுதி என மூன்று இடங்களில் எல்.இ.டி., திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுத்தம் வரும் போதும், அந்த இடத்தின் பெயர் எல்.இ.டி., திரையில் ஒளிரும். ஆடியோ மூலமும் கேட்கலாம்.
l மகளிர் பயணியரின் பாதுகாப்புக்காக, அவசர கால 'பட்டன்' பொருத்தப்பட்டுள்ளது
l தீ விபத்து ஏற்படும் போது, தகவல் அளிக்கும் வகையில், எச்சரிக்கை மணி உள்ளது
l குறிப்பிட்ட பஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் வகையில், ஜி.பி.எஸ்., வசதி உள்ளது
l அவசர காலத்தில், பஸ் நிறுத்துவதற்காக, 'ஸ்டாப் பட்டன்' உள்ளது. தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுஉள்ளன.

