ADDED : ஆக 17, 2024 10:56 PM
பெங்களூரு: “வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, தேவையான திருத்தங்கள் செய்து கொள்ள அதிகாரிகள் வீடு, வீடாக வந்து தகவல் பெறுவர். இவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, வாக்காளர் பட்டியல் மறு சீராய்வு செய்யப்படுகிறது. இப்பணிகள் வரும் 20ல் துவங்கவுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் வீடு, வீடாக சென்று, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்ப்பர், திருத்தம் செய்வர், இறந்தவர்களின் பெயரை நீக்குவர். வீடுகளுக்கு வரும் அதிகாரிகளுக்கு, மக்கள் தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அக்டோபர் 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 29 முதல், நவம்பர் 18 வரை பொதுமக்கள் ஆட்சேபங்கள் தெரிவிக்கலாம். ஜனவரி 6ல் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி, திருத்தங்கள் செய்து கொள்ளலாம். புதிய வாக்காளர்கள், தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.