சுரேஷ் தோல்விக்கு முதல்வரே காரணம் எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
சுரேஷ் தோல்விக்கு முதல்வரே காரணம் எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 28, 2024 11:14 PM

கோலார்: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை தோற்கடித்தது, முதல்வர் சித்தராமையா தான் என கூறியதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எரியும் தீயில் நெய் ஊற்றி உள்ளார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
துமகூரில், இதற்கு முன்பு பரமேஸ்வரை தோற்கடித்ததைப் போன்று, இம்முறை லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை தோற்கடித்து உள்ளனர். சிவகுமார் முதல்வர் பதவியை கேட்பார் என்பதால், அவரது தம்பி சுரேஷை, முதல்வர் சித்தராமையா தோற்கடித்தார்.
முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் சிவகுமாரின் செல்வாக்கை குறைக்க, சுரேஷின் தோல்விக்கு முதல்வர் சித்தராமையா, மறைமுக காரணமாக இருந்தார். பெங்களூரில் நடந்த கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சியில், ஒக்கலிக மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள், முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தரும்படி கூறியுள்ளார்.
மேம்போக்காக பார்க்கும்போது, சுவாமிகளின் தனிப்பட்ட கருத்தாக தோன்றும். இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது, மாநில மக்களுக்கு தெரியும். சதுரங்க விளையாட்டை சிவகுமார் துவக்கி உள்ளார்.
சித்தராமையா, முதல்வராக இருந்தது போதும். இவர் புண்ணியவானாக இருந்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என, சுவாமிகளின் வாயால் கூற வைத்துள்ளார்.
மற்றொரு பக்கம், மூன்று துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என, கூறி குழப்பத்தை உருவாக்குகின்றனர். குழப்பத்தில் உள்ள இந்த அரசு, அதிக நாட்கள் நீடிக்காது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் சாபத்தால், அரசு கவிழும்.
இவ்வாறு அவர் கூறினார்.