எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேச்சால் சலசலப்பு - பங்கார்பேட்டையில் பா.ஜ., 'ரோடு ஷோ' ரத்து
எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேச்சால் சலசலப்பு - பங்கார்பேட்டையில் பா.ஜ., 'ரோடு ஷோ' ரத்து
ADDED : ஏப் 14, 2024 06:55 AM
பங்கார்பேட்டை: அடுத்த சட்டசபை தேர்தலில் பங்கார்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர், சிட்டிங் எம்.பி., எஸ்.முனிசாமி என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியதால், சலசலப்பு ஏற்பட்டது. 'ரோடு ஷோ' ரத்து செய்யப்பட்டது.
கோலார் தொகுதி ம.ஜ.த., வேட்பாளர் மல்லேஸ் பாபுவை ஆதரித்து, பா.ஜ., செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் பங்கார்பேட்டையில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுகையில், “அடுத்த சட்டசபைத் தேர்தலில், பங்கார்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர், தற்போதைய எம்.பி., முனிசாமி தான்,” என்றார்.
இதனால் கூட்டத்தில் இருந்த, முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., வெங்கட முனி, அவரது மகனும், ஜில்லா பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான மகேஷ் பாபு ஆகியோர் கோபமடைந்து, அசோக்கின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
'கடந்த சட்டசபை தேர்தலில் சீட் கேட்டோம்; மேலிடம் சமாதானம் செய்து வேறொருவருக்கு சீட் கொடுத்தனர். அடுத்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். அப்படி இருக்கும்போது, முனிசாமி பெயரை எப்படி சொல்லலாம்?' என, அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதனால் நடக்கவிருந்த 'ரோடு ஷோ' ரத்து செய்யப்பட்டது; வேறொரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறிவிட்டு, கூட்டத்தில் இருந்து அசோக் புறப்பட்டுச் சென்றார்.
பா.ஜ.,வினர் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது. முனிசாமி கோஷ்டி, வெங்கட் முனி கோஷ்டி என, இரு கோஷ்டியாக காணப்பட்டனர்.

