ஓட்டு எண்ணிக்கையை முறையாக நடத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை
ஓட்டு எண்ணிக்கையை முறையாக நடத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை
UPDATED : ஜூன் 03, 2024 04:36 AM
ADDED : ஜூன் 03, 2024 04:35 AM

புதுடில்லி : தபால் ஓட்டுகளை எண்ணத் துவங்கிய பிறகே ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ண வேண்டும் என, 'இண்டியா' கூட்டணி யினர் தேர்தல் கமிஷனில் நேற்று மனு அளித்தனர்.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மூத்த தலைவர்கள், புதுடில்லியில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், ஓட்டு எண்ணிக்கையின் போது இண்டியா கூட்டணி முகவர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப் பட்டது.
ஆலோசனை கூட்டம்
இதைத் தொடர்ந்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், பொதுச்செயலர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
அப்போது, இண்டியா கூட்டணி வேட்பாளர்கள், சட்டசபை கட்சி தலைவர்கள், மாநில காங்., தலைவர் கள் உள்ளிட்டோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஓட்டு எண்ணிக்கையின் போது விழிப்புடன் செயல்படவும், முறைகேடுகளை உடனுக்குடன் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, காங்., மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், தி.மு.க.,வின் பாலு, இந்திய கம்யூ., பொதுச் செயலர் ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகளை நேற்று மாலை சந்தித்தனர்.
அப்போது, ஓட்டு எண்ணும் நெறிமுறைகளைப் பற்றி விவாதித்ததுடன், வகுக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும்படி அவர்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து, அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: தேர்தல் கமிஷன் அதிகாரிகளை மூன்றாவது முறையாக நேரில் சந்தித்து முறையிட்டுள்ளோம். அவர்களிடம் சில புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விதிகளின்படி தபால் ஓட்டுகள் தான் முதலில் எண்ணப்பட வேண்டும். இந்த விதிகளை ரத்து செய்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் முதலில் எண்ண உள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
விதிகளை மீறாமல், தபால் ஓட்டுகளை முதலில் எண்ணும்படி தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளோம்.
மேலும், ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தெளிவான வழிகாட்டும் குறிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கைகளை அவர்கள் பொறுமையுடன் கேட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ''ஓட்டு எண்ணிக்கையின்போது தீவிர கண்காணிப்பு வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். திருப்தியான பதிலை தேர்தல் கமிஷனர்கள் அளித்துள்ளனர். விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யும்படி தெரிவித்துள்ளோம்,'' என்றார்.
பா.ஜ.,வும் முறையீடு
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்களும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
இதன்பின் அவர்கள் கூறுகையில், 'தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடும் வகையிலும், அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது, வன்முறை ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்' என்றனர்.