அரசு துறைகளில் நேரடி நியமனங்கள் திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
அரசு துறைகளில் நேரடி நியமனங்கள் திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 19, 2024 12:57 AM

புதுடில்லி: மத்திய அரசு துறைகளில், 45 இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிபுணர்களை பணி நியமனம் செய்ய, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு துறைகளில் உள்ள உயர் பதவிகளுக்கு அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை நியமிக்கும் முயற்சியை 2018ல் துவக்கியது.
ஆராய்ச்சி மையம்
இதன்படி, இதுவரை 63 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 35 பேர் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள். வழக்கமாக இதுபோன்ற பணிகளுக்கு, ஐ.ஏ.எஸ்., போன்ற மத்திய சேவை அதிகாரிகளே நியமிக்கப்படுவர்.
தனியார் துறையில் உள்ளவர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்தும் வகையில், அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, பல்வேறு துறைகளில் 10 இணை செயலர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலர் பதவிகளுக்காக, அந்த துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்கள், பல்கலைகள் மட்டுமின்றி தனியார் துறைகளை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முதலில் மூன்று ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். தேவைப்படும் நிலையில், ஐந்து ஆண்டாக உயர்த்தப்படும்.
இவ்வாறு யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
உயர் பதவி
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
தங்கள் கொள்கைகளுடன் இணக்கமாக செல்பவர்களை பின்வாசல் வழியாக அரசின் உயர் பதவிகளில் அமர்த்தும் பா.ஜ.,வின் சதியே இந்த அறிவிப்பு.
அரசு துறைகளின் உயர் பதவிகளில் இப்படி நேரடியான நியமனங்கள் நடந்தால், இன்றைய அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உயர் பதவிகளை அடைவதற்கான வழி மூடப்பட்டுவிடும்.
சாமானியர்களுக்கு குமாஸ்தா மற்றும் பியூன் வேலை மட்டுமே மிச்சமிருக்கும். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டை பறிக்கும் சதி இது.
பா.ஜ., அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெறவில்லை எனில், அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், “உயர் பதவிகளை எந்த விதியும் இல்லாமல் நேரடி நியமனங்கள் வாயிலாக தன்னிச்சையாக நிரப்புவது சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது,” என்றார்.